ஈரான் வெளியுறவு அமைச்சருக்கு அமெரிக்கா பொருளாதார தடை

ஈரான் வெளியுறவு அமைச்சர் மொஹமது ஜவாத் சாரிப்புக்கு எதிராக அமெரிக்க கருவூலத் திணைக்களம் தடை விதித்துள்ளது.

அமெரிக்காவில் சாரிப்பின் எந்த ஒரு சொத்தும் இந்த தடை மூலம் முடக்கப்படுவதாக அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

“ஈரானின் உயர்மட்டத் தலைவரின் (ஆயதுல்லா அலி கமனெய்) பொறுப்பற்ற நிகழ்ச்சி நிரலை ஜவாத் சாரிப் முன்னெடுக்கிறார்” என்று கருவூலச் செயலாளர் ஸ்டீவன் ம்னுச்சின் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாலேயே தம் மீது தடை விதித்திருப்பதாக சாரிப் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானின் அணு செயற்பாடுகளை மட்டுப்படுத்தும் 2015 ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா கடந்த ஆண்டு விலகிக் கொண்டதை அடுத்து ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றம் அதிகரித்துள்ளது.

முக்கிய கப்பல் போக்குவரத்து பாதையை ஒட்டி வளைகுடா பிராந்தியத்தில் அண்மைக் காலத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் இராணுவ மோதல் ஒன்றுக்கு இட்டுச் செல்லும் அபாயத்தை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் உலகெங்கும் ஈரானின் பிரதான பேச்சாளராக சாரிப் இருப்பதாக ம்னுச்சின் குறிப்பிட்டுள்ளார்.

“ஈரானிய அரசின் அண்மைய செயற்பாடுகள் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது என்ற செய்தியை அமெரிக்கா வழங்கியுள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

என்னிடம் ஈரானுக்கு வெளியே எந்த சொத்தும் இல்லாத போது அமெரிக்காவின் இந்த நடவடிக்கை “எனக்கோ அல்லது எனது குடும்பத்தினருக்கோ பாதிப்பை ஏற்படுத்தாது” என்று சாரிப் குறிப்பிட்டார்.

“உலகம் முழுவதும் ஈரானின் பிரதான பேச்சாளராக நான் இருப்பது தான் அமெரிக்கா என் மீது இவ்வாறு நடவடிக்கை எடுத்திருப்பதற்கு காரணம். அந்த உண்மை அவர்களுக்கு வேதனையை தருகிறதா?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

Fri, 08/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை