கொழும்பு - கண்டி நெடுஞ்சாலை; சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கு பெறுமதியை விட மூன்று மடங்கு நஷ்டஈடு

கொழும்பு கண்டி அதிவேக நெடுஞ்சாலை அமைப்பதற்காக காணிகள் சுவீகரிக்கப்பட்டவர்களுக்கு மதிப்பிடப்பட்ட நஷ்டஈட்டுத் தொகையையும் விட மூன்று மடங்கு பெறுமதியான நஷ்டஈடு வழங்கப்பட்டிருப்பதாக பொது நிறுவனங்கள், கண்டி மரபுரிமைகள் மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சரும், சபை முதல்வருமான

 

லக்ஷ்மன் கிரியல்ல பாராளுமன்றத்தில் தெரிவித்தார். நெடுஞ்சாலைகள் அமைச்சராகவிருந்த காலத்தில் மத்திய அதிவேக நெடுஞ்சாலைக்கு சுவீகரிக்கப்பட்ட 25,000 காணித் துண்டுகளுக்கு தான் நஷ்ட ஈட்டை வழங்கியிருப்பதாகவும் கூறினார். வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் இந்தத் தகவல்களை முன்வைத்தார்.

நெடுஞ்சாலை அமைப்பதற்காக காணி சுவீகரிக்கப்பட்டவர்கள் தமக்குப் போதியளவு நஷ்டஈடு கிடைக்கவில்லையாயின் அது தொடர்பில் மேன்முறையீடு செய்ய முடியும். நஷ்டஈடு வழங்கும் செயற்பாடுகளை நிதியமைச்சே முன்னெடுக்கிறது. அதனூடாக நஷ்டஈட்டைப் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்றார்.

இதேவேளை, சில காணி உரிமையாளர்களுக்கு மாத்திரம் மதிப்பீடு செய்யப்பட்ட நஷ்டஈட்டுப் பெறுமதியைவிட மூன்று மடங்கு அதிகமான நஷ்டஈடு கிடைத்துள்ளபோதும் பலருக்கு காணிப் பெறுமதியிலும் விட மிகவும் குறைவான நஷ்டஈடே மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் என தயாசிறி ஜயசேகர மேலும் தெரிவித்தார்.

மகேஸ்வரன் பிரசாத்

Sat, 08/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை