பிள்ளைகளுக்கு உயர் கல்வியை வழங்குவது போன்று நாட்டை பற்றி சிந்திக்கவும் அறிவூட்ட வேண்டும்

பிள்ளைகளின் கல்வியை வெற்றிகரமானதாகவும் வளமானதாகவும் ஆக்குவதன் மூலம் மாணவச் செல்வங்களை நாட்டின் நற்பிரஜைகளாக மாற்றியமைக்க அனைவரும் கைகோர்த்துச் செயற்பட வேண்டுமென லேக்ஹவுஸ் நிறுவனத்தின் தலைவர் கிரிஷாந்த குரே தெரிவித்தார்.

லேக்ஹவுஸ் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் பிள்ளைகளுக்கு (புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றியவர்களுக்கு) வருடாந்தம் வழங்கப்படும் புலமைப்பரிசில் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

20 ஆவது வருடமாக இந்த புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் 2018ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய 21 பேருக்கு இதன்போது பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இங்கு மேலும் உரையாற்றும் போது, பரிசில்களைப் பெற்றுக்கொண்ட மாணவர்களை வாழ்த்துகிறேன். பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை போன்று பெற்றோரும் பொறுப்புணர்வுடன் கடுமையாக உழைக்கின்றனர். பிள்ளைகளை போன்று பெற்றோருக்கும் இன்று ஒரு முக்கியமான நாளாகும். பிள்ளைகளை பெற்றெடுத்தது முதல் ஏனைய வேலைகளுக்கு அப்பால் பிள்ளைகள் பற்றியே அதிகமாக சிந்திப்பார்கள்.

பிள்ளைகளை சிறந்த பிரஜைகளாக உருவாக்க அவர்களுக்கு நன்மை, தீமைகளை சொல்லிக்கொடுக்க வேண்டும். சரி, பிழைகளுக்கு எதிராக குரல்கொடுக்கும் சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும். அவ்வாறுதான் நாட்டில் சிறந்த பிரஜைகளை உருவாக்க முடியும். தாம் பிறந்த நாட்டுக்கு அன்பு செலுத்த, பாதுகாக்க, நாட்டை சுத்தமாக வைத்துக்கொள்ள மற்றும் ஏனையவர்களுடன் ஒழுக்கத்துடன் நடந்துக்கொள்ளும் பிள்ளைகளை நாம் உருவாக்க வேண்டும்.

உலகம் வளர்ச்சியடைய வேண்டும் என்றால் நாடும் வளர்ச்சியடைய வேண்டும். நாடு ஒன்று வளர்ச்சியடைய வேண்டுமென்றால் குடும்பமொன்று வளர்ச்சியடைய வேண்டும். குடும்பங்கள் வளர்ச்சியடைய வேண்டுமென்றால் பிரஜைகள் நற்பிரஜைகளாக உருவாக்க வேண்டும். அதற்காக கல்வி உட்பட ஏனையவற்றை நாம் பெற்றுக்கொடுக்க வேண்டும்.

ஏனைய நாடுகள் வளர்ச்சியடைய காரணம் நாட்டின் பிரஜா உரிமை தொடர்பில் அவர்கள் அறிந்து வைத்துள்ளமையாகும். வாக்களிக்க மாட்டேன் எனக் கூறுவதற்கு பதிலாக வாக்கை அளிப்பேன் எனக் கூறுவதுதான் முக்கியம். மக்கள் துன்பங்களை உணர்வது கட்டாயமாகும். மாணவர்களுக்கு உயர் கல்வியை வழங்குவது போன்று அவர்களுக்கு நாடு பற்றி சிந்திக்கவும் அறிவூட்ட வேண்டும்.

நிறுவனத்தில் பணி புரிபவர்கள் இருக்கும் காலப்பகுதியை மாத்திரம் சிந்திக்காது எதிர்காலம் தொடர்பிலும் சிந்தித்து செயற்படுங்கள் என்றார்.

Sat, 08/31/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை