நிபுணத்துவ சபையின் அறிக்கை கிடைக்கும் வரை ஒத்திவைப்பு

குருநாகல் வைத்தியர் சாபி சிஹாப்தீன், கருத்தடை சத்திர சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளாரா? இல்லையா? என்பது தொடர்பில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பீடாதிபதி தலைமையில் விசேட வைத்தி நிபுணர்களடங்கிய நிபுணத்துவ சபையின் அறிக்கை கிடைக்கும் வரை அவருக்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்படுவதாக குருநாகல் பிரதான நீதவான் சம்பத் ஹேவாவசம் நேற்று உத்தரவு பிறப்பித்தார்.

கொழும்பு பல்கலைக்கழக நிபுணத்துவ சபையின் அறிக்கையானது உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளக் கூடியதொன்று என்பதுடன் இதுவே சிறந்த நடை முறையென்றும் தெரிவித்த அவர், வழக்கை எதிர்வரும் செப்டம்பர் 12ஆம் திகதிவரை ஒத்திவைத்தார்.

அதற்கு முன்னர் அறிக்கை கிடைக்கப்பெற்றால் முன்னதாக வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகவும் குறிப்பிட்டார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் பீடாதிபதி பேராசிரியர் ஜேனிகா பெரேரா நீதிமன்றுக்கு இரண்டு கடிதங்களை அனுப்பியுள்ளதுடன், மகப்பேற்று விசேட மருத்துவ சபையின் தலைவரையும் இந்த பரிசோதனைகளுக்கு இணைத்துக் கொள்வதற்கான வேண்டுகோளை விடுத்துள்ளார்.

வைத்தியர் ஷாபி, கருத்தடை சத்திர சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளமைக்கான சாட்சிகள் எதுவும் இதுவரை நிரூபிக்கப்படவில்லையெனவும் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் குற்றப்புலனாய்வுப் பிரிவின் உதவி பொலிஸ் அதிகாரி எஸ்.பி. திசேரா, நீதிமன்றில் விளக்கமளித்ததை யடுத்தே நீதவான் மேற்படி உத்தரவை பிறப்பித்தார்.

அத்துடன், தடைசெய்யப்பட்ட இயக்கமான தேசிய தெளஹீத் ஜமா அத் அமைப்புடன் வைத்தியர் சாபி தொடர்புகளை பேணிவந்தாரா என புலனாய்வுப் பிரிவினரும், பயங்கரவாதத் தடுப்பு பிரிவும், முப்படையினரும் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரி கூறினார்.

 

Sat, 08/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை