இலங்கையிலிருந்து தீவிராவதிகள் ஊடுருவிய தகவலை இராணுவம், கடற்படை மறுப்பு

இலங்கையிலிருந்து தீவிராவதிகள் ஊடுருவிய தகவலை இராணுவம், கடற்படை மறுப்பு-Sri Lanka Navy and Army Denies Terrorist infiltration from Sri Lanka

இலங்கையிலிருந்து தீவிரவாதிகள் 6 பேர், இந்தியாவுக்குள் ஊடுருவியுள்ளதாக வெளியான தகவலை ஏற்க முடியாது என இலங்கை கடற்படை மற்றும் இராணுவம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள இலங்கை கடற்படை பேச்சாளர் இசுறு சூரிய பண்டார, கடற்படையினர் 24 மணி நேரமும் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதால், தீவிரவாதிகள் இலங்கையில் இருந்து கடல் மார்க்கமாக தப்பிச் செல்ல வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கையிலிருந்து தீவிரவாதிகள் இந்தியாவிற்கு ஊடுருவி உள்ளது தொடர்பான தகவலை ஏற்றுக் கொள்ள முடியாது என இலங்கை இராணுவத்தின் ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் மற்றும் இலங்கையைச் சேர்ந்த தீவிரவாதிகள் 6 பேர் தமிழகத்திற்குள் ஊடுருவியுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தீவிரவாதிகளுடன் தொடர்புடைய நபர்கள் என்று சந்தேகிக்கப்படும் சிலர் தமிழகம் முழுக்க கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இவ்வாறு 10 இற்கும் மேற்பட்ட நபர்கள் அந்நாட்டு பொலிசாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, தேசிய பாதுகாப்பு படை அதிகாரிகளால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த தீவிரவாதிகள், லஸ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்தவர்கள் பாகிஸ்தானியர்கள் என்றும், இலங்கை சென்று அங்கிருந்து படகு மூலம் தமிழகத்திற்கு இரகசியமாக நுழைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

ஆயினும் இலங்கை கடற்படை மற்றும் இராணுவம் இதனை மறுத்துள்ளது.

Sun, 08/25/2019 - 14:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை