யெமன் அரசின் கோட்டை பிரிவினைவாதிகள் வசம்

யெமனில் அரசுக்கு ஆதரவான துருப்புகளுடன் கடந்த ஒருசில தினங்கள் நீடித்த உக்கிர மோதலுக்குப் பின் துறைமுக நகரான அதெனை பிரிவினைவாதிகள் கைப்பற்றியுள்ளனர்.

யெமனின் தென் பகுதியில் சுதந்திரத்தை கோரிவரும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஆதரவு பெற்ற தெற்கு நிலைமாற்று கெளன்சில், அந்த நகரில் உள்ள இராணுவ முகாம்கள் மற்றும் ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றியதாக அறிவித்துள்ளது.

இதற்கு எதிர்ப்பை வெளியிட்டிருக்கும் சவூதி அரேபியா தலைமையிலான கூட்டணி இராணுவ ரீதியில் பதில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.

இதனை ஒரு சதிப்புரட்சி என்று யெமன் அரசு குறிப்பிட்டுள்ளது. பிரிவினைவாதிகளை தனது நிலைகளில் இருந்து வாபஸ் பெறும்படி அரசு கேட்டுள்ளது.

நாட்டின் அரசாங்கத்திற்கு எதிரான அச்சுறுத்தலுக்காக வான் தாக்குதல்கள் நடத்தப்படும் என்றும் அது எச்சரித்துள்ளது.

யெமன் சிவில் யுத்தத்தில் இந்தப் பிரிவினைவாதிகள் அரச ஆதரவுப் படையுடன் இணைந்து சண்டையிட்டபோதும் அந்தக் கூட்டணி பலவீனமான ஒன்றாகவே இருந்து வந்தது.

அதென் நகரே ஜனாதிபதி அப்த் ரப்பு மன்சூர் ஹதி அரசாங்கத்தின் தளமாக இருந்து வருகிறது. எனினும் ஜனாதிபதி சவூதி தலைநகர் ரியாதில் வசித்து வருகிறார்.

இதில் எந்த சண்டையும் இன்றி அந்த நகரில் உள்ள ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றியதாக பிரிவினைவாதிகளின் அதிகாரிகள் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு குறிப்பிட்டுள்ளனர்.

மறுபுறம் யெமன் அரசு ஆதரவுப் படை ஹுத்தி சியா கிளர்ச்சியாளர்களுடன் சண்டையிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Mon, 08/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை