சுழற்சி முறையில் ஹொங்கொங்கிற்கு புதிய துருப்புகளை அனுப்பியது சீனா

முழு ஜனநாயகத்தை கோரி ஹொங்கொங் ஆர்ப்பாட்டக்காரர்கள் புதிய பேரணி ஒன்றுக்கு தயாராகி வரும் நிலையில் சீனா தனது ஆயிரக்கணக்கான துருப்புகளை சுழற்சி முறையில் மாற்றியுள்ளது.

ஹொங்கொங்கின் சுபீட்சம் மற்றும் ஸ்திரத்தன்மையை பேணுவதில் சீன இராணுவம் சிறந்த பங்களிப்பு செய்கிறது என்று சீன அரச ஊடகமான சின்ஹவ் குறிப்பிட்டுள்ளது. எனினும் இந்த துருப்புகள் மாற்றம் வழக்கமான ஒன்று என்று அது குறிப்பிட்டுள்ளது.

தென் சீன தளம் மற்றும் ஹொங்கொங்கின் முன்னாள் பிரிட்டிஷ் இராணுவ முகாம்களில் 8,000 தொடக்கம் 10,000 வரையான துருப்புகள் நிலைகொண்டிருப்பதாக அவதானிகள் நம்புகின்றனர்.

1997 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஹொங்கொங்கை கையளித்து ஒரு மணி நேரத்திற்குள் வெள்ளை கையுறை அணி்ந்த சீனா இராணுவம் ஹொங்கொங்கிற்கு நுழைந்தது. அந்தப் படைகள் அடிக்கடி பயிற்சிகளில் ஈடுபட்டபோதும் எப்போதாவதே தமது முகாம்களுக்கு வெளியே நிலைகொண்டிருக்கும்.

எனினும் ஹொங்கொங்கில் கடந்த மூன்று மாதங்களாக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில் இந்த நகர்வு அதிக அவதானத்தை பெற்றுள்ளது.

சீன இராணுவத்தின் ஷேக் கொங் இராணுவ முகாமை சூழவும் உள்ளேயும் நேற்று குறிப்படத்தக்க அளவில் செயற்பாடுகள் இடம்பெறுவதை காண முடிந்ததாக ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

ஹொங்கொங்கில் இடம்பெறும் ஆர்ப்பாட்டங்களை கண்டிக்கும் சீனா, இந்த விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் தலையிடுவதாக குற்றம்சாட்டுகிறது. அங்கு தலையிடுவது குறித்தும் சீனா அண்மைக் காலங்களில் சமிக்ஞைகளை வெளியிட்டு வருகிறது.

ஹொங்கொங்கை ஒட்டிய ஷென்சனில் உள்ள விளையாட்டு அரங்கு ஒன்றில் இந்த மாதத்தில் நூற்றுக்கணக்கான சீன படையினர் வழக்கத்திற்கு மாறாக இராணுவப் பயிற்சியில் ஈடுப்பட்டிருந்தது அவதானத்தை பெற்றது. இது கவலை அளிப்பதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் குறிப்பிட்டிருந்தது.

ஹொங்கொங் அரசியலமைப்பின் கீழ் நகரத்தில் பொது ஒழுங்குகள் மற்றும் அனர்த்த நிவாரணங்களுக்கு சீன இராணுவத்தின் உதவிகளை கோர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நாளை சனிக்கிழமைக்கு திட்டமிடப்பட்டுள்ள எதிர்ப்பு ஊர்வலத்திற்கு ஹொங்கொங் பொலிஸார் தடை விதித்திருப்பதாக ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.

தொடர்ந்து 13ஆவது வாரமாக ஜனநாயக ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுவரும் ஹொங்கொங்கில் பொலிஸார் விதித்த தடை ஆர்ப்பாட்டக்காரர்களின் கோபத்தைத் தூண்டக்கூடும் என நம்பப்படுகிறது.

கடந்த வார இறுதியில் நடைபெற்ற பேரணிகளில் வன்முறை மூண்டதால் மனித உரிமை குழுவின் எதிர்வரும் ஊர்வலத்திற்கு அனுமதியளிப்பது பாதுகாப்புக்கு ஆபத்தானது என பொலிஸார் கருதுவதாக சவுத் சைனா மோர்னிங் போஸ்ட் பத்திரிகை தெரிவித்தது.

Fri, 08/30/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை