ஐக்கிய தேசிய கட்சியினர் இன்று தீர்மானம் மிக்க பேச்சுவார்த்தை

புதிய கூட்டணி, ஜனாதிபதி வேட்பாளர்;

ஜனாதிபதித் தேர்தலுக்கான புதிய கூட்டணி மற்றும் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்களுக்கும், ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களுக்கும் இடையில் இன்றைய தினம் தீர்மானமிக்க பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.  

ஐ.தே.முவின் தலைவர்களுடன் சந்திப்பை நடத்தும் முன்னர் ஐ.தே.கவின் பின்வரிசை எம்.பிக்கள் மற்றும் சிரேஷ்ட தலைவர்களுடன் , ஐ.தே.கவின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விசேட பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.  

ஜனாதிபதி வேட்பாளர் யார்? என்பது தொடர்பில் ஐ.தே.கவில் வெடித்துள்ள பிரச்சினை தற்போது பூதாகரமாக மாறியுள்ளது. ஐ.தே.கவின் பிரதி தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாஸதான் ஜனாதிபதி வேட்பாளர் என்பதை நாட்டு மக்களுக்கு பிரபல்யப்படுத்தும் செயற்பாட்டில் ஒரு தரப்பினர் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக அண்மையில் பதுளையில் நடைபெற்ற கூட்டத்தின் பின்னர் சஜித் பிரேமதாஸவுக்கான ஆதரவு கட்சிக்குள்ளும் வலுப்பெற்றுள்ளது.  

இந்நிலையில் ஐ.தே.கவின் பங்காளிக் கட்சித் தலைவர்களும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவான தரப்பும் சஜித் பிரேமதாஸ ஜனாதிபதி வேட்பாளராக வருவதை விரும்பவில்லை. சஜித் பிரேமதாஸ ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட்டால் கூட்டணியில் பிளவுகள் ஏற்படுமென பங்காளிக் கட்சியின் சில தலைவர்கள் பிரமருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், கூட்டணியில் உள்ள சில சிறுபான்மை தலைவர்கள் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவான நிலைப்பாட்டிலும் உள்ளனர்.  

சபாநாயகர் கருஜயசூரிய அல்லது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவரில் ஒருவரே வேட்பாளராக வேண்டும் என்பதே சஜிதை எதிர்க்கும் தரப்பின் கோரிக்கையாக உள்ளது. சஜித் பிரேமதாஸவுக்கான ஆதரவு கட்சிக்குள் வலுபெற்றுள்ள சூழலில் இன்றைய தினம் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகளில் இறுதி முடிவுகள் எட்டப்படவுள்ளன.   

இதேவேளை, சஜித் பிரேமதாஸ ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்படும் பட்சத்தில் அடுத்த பிரதமர் வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க என்பதையும், கட்சியின் தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்படாது என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்ற நிபந்தனையை ஐ.தே.கவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவாகச் செயற்படும் தரப்பினருக்கு தெரியப்படுத்தியுள்ளனர். தற்போதைய சூழலில் ஐ.தே.கவுக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வாக சஜித் பிரேமதாஸ ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட்டால் மாத்திரமே தீர்வு ஏற்படும் என்பது அரசியல் அவதானிகளின் கருத்தாகவுள்ளது.  

சுப்பிரமணியம் நிஷாந்தன்  

 

Sat, 08/17/2019 - 08:50


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை