ஜனாதிபதி தேர்தலில் ஹிஸ்புல்லா போட்டியிடுவது முஸ்லிம் மக்களை காட்டிக் கொடுக்கும் செயல்

ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்களின் பொது வேட்பாளராக கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.எம்.ஹிஸ்புல்லா போட்டியிடுவது முஸ்லிம் மக்களை காட்டிக் கொடுக்கின்ற காரியமாகும் என்பதுடன், பெரும்பான்மை சமூகத்திடமிருந்து முஸ்லிம்கள் இன்னும் தூரமாகி விடுவார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் தெரிவித்தார்.

சம்மாந்துறையில் நேற்று (25) ஜனாதிபதித் தேர்தல் சம்பந்தமாக கட்சி ஆதரவாளர்களுடன் நடைபெற்ற கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் தெரிவிக்கையில், - முஸ்லிம் மக்களைப் பொறுத்த வரையில் ஜனாதிபதித் தேர்தலில் தாம் தீர்மானிக்கும் சக்தியாக இருக்க வேண்டும்.

முன்னாள் ஆளுநர் எம்.எல்.எம்.ஹிஸ்புல்லாவின் வரலாறு, அவரின் அரசியல் தீர்மானங்கள் என்பனவற்றை எடுத்துப் பார்க்கும் போது அவர் ஒரு சந்தர்ப்பவாத அரசியல்வாதியாகவும் சுயநல அரசியல்வாதியாகவும் பார்க்கப்படுகின்றார்.

இந்நாட்டில் 30 வீதமாக வாழ்கின்ற தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ சிறுபான்மையினத்தைச் சேர்ந்த மக்களின் வாக்குகள் பிரதானமாக நோக்கப்படுகின்றன.

சிறுபான்மைச் சமூகத்தைச் சார்ந்தோர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டாலும் அவர்களினால் ஜனாதிபதியாக வெற்றி பெறமுடியாதுடன், ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம்கள் தனித்துப்போட்டியிட்டால் பெரும்பான்மை சமூகத்திடமிருந்து முஸ்லிம்கள் இன்னும் தூரமாகி விடுவார்கள்.

ஒரு சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த முஸ்லிம் ஒருவர் தன்னை ஒரு வேட்பாளராக போட்டியிடுவதன் மூலமாக தெரிவு செய்யப்படுகின்ற ஜனாதிபதி எவராக இருந்தாலும் தெரிவு விடயத்தில் முஸ்லிம் சமூகம் ஆதரவு அளிக்கவில்லை என்ற ஆதங்கம் காணப்படும். இது முஸ்லிம் சமூகத்தை காட்டிக் கொடுக்கின்ற காரியமாகப் பார்க்கப்படும். இதனை முஸ்லிம் சமூகம் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளக் கூடாது.

முஸ்லிம் காங்கிரஸினைப் பொறுத்த வரை அனைத்துக் கட்சிகளும் தமது ஜனாதிபதி வேட்பாளர்களை அறிவித்த பின்னரே யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்து பகிரங்கப்படுத்த முடியும். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரினதும் கொள்கைகள், எதிர்காலத் திட்டங்கள் உள்ளிட்ட தேர்தல் விஞ்ஞானத்தை ஆராய வேண்டும். அதன் பின்னரே யாருக்கு ஆதரவு வழங்வதென்பதைத் தீர்மானிப்போம்.

ஜனாதிபதி தேர்தல் சம்பந்தமாக முஸ்லிம் காங்கிரஸ் அவசரப்பட்டு எந்த தீர்மானமும் எடுக்காது. ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் யாரென்று அறிவித்த பின்னரே முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஆதரவு வழங்குவது பற்றி முடிவெடுக்கும் என்றார்.

 

சம்மாந்துறை கிழக்கு தினகரன் நிருபர்

Mon, 08/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை