தற்கொலை குண்டுதாரியின் உடற்பாகத்தை அப்புறப்படுத்துமாறு கோரி போராட்டம்

மட்டு. இந்து மயானத்தில் புதைக்கப்பட்ட

மட்டக்களப்பு, கல்வியங்காடு இந்து மயானத்தில் தற்கொலை குண்டுதாரி ஒருவரின் உடற்பாகங்கள் புதைக்கப்பட்டதை கண்டித்துத்தும், அதனை அப்புறப்படுத்துமாறு கோரி கவனயீர்ப்பு ஆட்பாட்டம் இடம்பெற்றது.

மட்டு. இந்து மயானத்தில் தற்கொலைதாரி ஒருவரின் உடற்பாகத்தை புதைத்துள்ளமயினால் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது. இதனால் இப்பிரச்சினை போராட்டமாக வெடித்தது.

பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரனின் தலைமையில் நேற்றுமுன்தினம் (27) ஒன்றுகூடிய இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் வீதியை மறித்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுதாரியின் உடற்பாகங்களை கள்ளியங்காடு இந்துமயானத்தில் புதைக்க வேண்டாம் என பல தடவைகள் அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை மாலை உடற்பாகங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதையடுத்தே இக் கவனயீர்ப்பு ஆட்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதியை மறித்து போராட்டம் மேற்கொள்ளப்பட்டதன் காரணமாக பல பிரதேசங்களுக்கு இடையிலான போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டன.

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் உயிரிழந்த முகமட் ஆசாத் என்பவரின் உடற்பாகங்களை மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயானத்தில் பொலிசார் புதைத்ததை எதிர்த்து பொதுமக்கள் நேற்றுமுன்தினம் மயானத்தின் வீதியை மறித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி உயித்த ஞாயிறு தினத்தில் தற்கொலை குண்டுதாக்குதலில் சிதறிக் கிடந்த தலை மற்றும் உடற்பாகங்கள் அடையாளம் காணப்படாத நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும். இந்த நிலையில் திங்கட்கிழமை(26) மாலை கள்ளியங்காடு இந்து மயானத்தில் குறித்த உடற்பாகங்களை இரகசியமாக பொலிசார் புதைத்துள்ளனர்.

இது தொடர்பாக பிரதேச மக்களுக்கு தெரியவந்ததையடுத்து குறித்த மயானத்துக்கு முன் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் மற்றும் பொதுமக்கள் ஒன்று திரண்டு வீதியில் அமர்ந்து புதைக்கப்பட்ட உடற்பாகங்களை தோண்டி எடுக்குமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

 

Thu, 08/29/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை