பிரெக்சிட்டுக்கு முன் பாராளுமன்றத்தை கட்டுப்படுத்த பிரிட்டன் அரசாங்கம் திட்டம்

பாராளுமன்றத்தை இடைநிறுத்த கோரிக்கை

செப்டெம்பர் நடுப்பகுதியில் இருந்து பாராளுமன்றத்தை இடைநிறுத்தும்படி மகாராணியை பிரிட்டன் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கோரியுள்ளார். பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து உடன்பாடு இன்றி வெளியேறுவதை தடுக்கும் எம்.பிக்களுக்கான கால அவகாசத்தை குறைப்பதாக இந்த நடவடிக்கை உள்ளது.

பாராளுமன்றம் ஒக்டோபர் 14 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்படும் என்று ஜோன்சன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரெக்சிட் காலக்கெடு ஒக்டோபர் 31 ஆம் திகதியுடன் முடிவுற இருக்கும் நிலையில் அந்த திகதியில் ஒப்பந்தம் இன்றியேனும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகும் என்று ஜோன்சன் உறுதி அளித்துள்ளார்.

கோடை விடுமுறைக்கு பின் வரும் செப்டெம்பர் 3 ஆம் திகதி எம்.பிக்கள் மீண்டும் பாராளுமன்றம் திரும்பவிருந்தனர். இந்நிலையில் அரசாங்கத்தின் இந்த நகர்வினால் உடன்பாடு இன்றி பிரெக்சிட் இடம்பெறுவதை தவிர்ப்பதற்கான சட்டம் ஒன்றை நிறைவேற்ற குறுகிய கால அவகாசமே கிடைக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் பாராளுமன்றத்தின் புதிய அமர்வுக்கான ஏற்பாடுகளை பிரிட்டன் அரசே மேற்கொள்கிறது. மகாராணியின் உரையுடன் புதிய அமர்வு ஆரம்பமாகும். அரசாங்கத்தின் சட்டவாக்க தேவைக்கு அமைவாகவே அது நிர்ணயிக்கப்படுகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து உடன்படிக்கை ஒன்று இல்லாமல் வெளியேறுவதை தடுப்பதற்கு பிரிட்டன் எதிர்க்கட்சிகள் இடையே உடன்பாடு ஒன்று எட்டப்பட்டுள்ளது.

இதற்காக சட்டமூலம் ஒன்றை நிறைவேற்றுவது மற்றும் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு ஒன்றை நிறைவேற்றுவதற்கு வாய்ப்பு உள்ளதாக எதிர்க்கட்சிகள் கூட்டாக வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாராளுமன்றத்தை ஒத்திவைக்கும் அரசின் நடவடிக்கை எதிர்க்கட்சிகளிடையே சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

“அடுத்த வாரம் எம்.பிக்கள் அவரை தடுப்பதற்கு ஒன்றிணைவிருந்த நிலையில், இன்று பிரிட்டன் ஜனநாயகத்தின் இருண்ட ஒன்றாக வரலாற்றில் பதிவாகும்” என்று ஸ்கொட்லாந்து முதல் அமைச்சர் நிகோலா ஸ்டுர்ஜன் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

ஜோன்சன் கோளைத்தனமாக செயற்பட்டிருப்பதாக கிரீன் கட்சி எம்.பி கரோலின் லுௗகாஸ் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் தற்போது ஜோன்சனுக்கு ஒரு இடமே பெரும்பான்மை உள்ளது. எனவே, நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றில் அவர் தோற்பதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது. அவரது அரசை கவிழ்ப்பது உடன்படிக்கை இன்றி பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தல் இருந்து விலகுவதை தடுக்காதபோதும், பிரெக்சிட் கால அவகாசத்தை நீடிப்பதற்கு அவருக்கு அழுத்தம் கொடுப்பதாக அமையும்.

Thu, 08/29/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை