கோட்டாபயவுக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் இருவர் முறைப்பாடு

* இரண்டு கடவுச்சீட்டுகள்
* வாக்காளர் இடாப்பில் பெயர்

பொது ஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளரும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளருமான கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்தார்.

இரண்டு வெளிநாட்டுக் கடவுச் சீட்டுகள் இருப்பதாகவும், 2004ஆம் ஆண்டில் அவர் இலங்கைப் பிரஜையாக இல்லாத நிலையில் 2005ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பில் அவரது பெயர் உள்ளடக்கப்பட்டிருப்பதாகவும் இந்த குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென பொலிஸ் தலைமையகத்தில் இந்த முறைப்பாடு கையளிக்கப்பட்டுள்ளதெனவும் அவர் தெரிவித்தார்.

பிரஜைகள் அமைப்பின் இணை அழைப்பாளர்களான காமினி வியங்கொட, பேராசிரியர் சந்திர குப்த தேநுவர ஆகியோரே இந்த முறைப்பாட்டை செய்துள்ளனர். நேற்று முன்தினம் (15) பொலிஸ் தலைமையகத்தில் இந்த முறைப்பாடு நேரடியாக கையளிக்கப்பட்டுள்ளது.

இம் முறைப்பாட்டில் 2003 ஜனவரி மாதம் 31ஆம் திகதி கோட்டாபய ராஜபக்ஷ, இலங்கை பிரஜாவுரிமையிலிருந்து விலகி ஐக்கிய அமெரிக்காவின் பிரஜாவுரிமையை பெற்றுக் கொண்டுள்ளார். அதன் பின்னர் 2005ஆம் ஆண்டு செப்டம்பர் நான்காம் திகதி கோட்டாபய ராஜபக்ஷ ON Arrival எனும் நாட்டுக்குள் பிரவேசிக்கும் விஸா மூலம் இலங்கை வந்துள்ளார்.

இதன் போது அவர் நீதிமன்றத்துக்கு வழங்கிய சத்தியக் கடிதத்தில் தனது சகோதரரின் தேர்தல் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பை பெற்றுக் கொடுப்பதற்காக இங்கு வந்ததாக குறிப்பிட்டிருக்கின்றார். அதன் பின்னர் கோட்டாபய ராஜபக்ஷ, அமெரிக்கப் பிரஜையாக இருக்கும் நிலையில் இலங்கையின் தேசிய அடையாள அட்டையொன்றை ஒரே நாள் சேவையின் மூலம் பெற்றுக் கொண்டதோடு மற்றொரு கடவுச் சீட்டையும் பெற்றுக் கொண்டுள்ளார். இதனிடையே 2004ஆம் ஆண்டில் 2005ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலிலும் தனது பெயரைப் பதிவு செய்துள்ளார். இது எப்படி நடந்தது? என்பது குறித்து முழு அளவிலான விசாரணை நடத்தப்பட வேண்டு மென இந்த முறைப்பாட்டில் கோரப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டை பதில் பொலிஸ் மாஅதிபர் சி.டி. விக்கிரமரட்ண, கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிடம் ஒப்படைத்து மனு தொடர்பில் விசாரணையை மேற்கொள்வதற்கு போதுமான காரணங்கள் உள்ளதா? என்பதை கண்டறிந்து அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு பணித்துள்ளாரென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

 

Sat, 08/17/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை