லிவர்பூல், செல்சி அணிகள் வெற்றி

இங்கிலிஷ் பிரிமியர் லீக் கால்பந்தின் புதிய பருவம் ஆரம்பமாக இன்னும் ஏழு நாட்களே இருக்கும் நிலையில், முன்னணி அணிகளான லிவர்பூல் மற்றும் செல்சி இம்முறை பட்டம் வெல்ல தீவிரம் காட்டியுள்ளன. அதற்கேற்ப பருவத்திற்கு முந்திய தயார்நிலை போட்டிகளிலும் இவ்விரு அணிகளும் வெற்றிகளை குவித்து வருகின்றன.

பிரான்ஸ் கால்பந்து அணியான லியோனுக்கு எதிராக நேற்று முன்தினம் நடைபெற்ற நட்புமுறை ஆட்டத்தில் லிவர்பூல் 2–1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. முன்னாள் மான்செஸ்டர் யுனைடெட் வீரரான மெம்பிஸ் டிப்பாய் ஆட்டத்தின் 4ஆவது நிமிடத்திலேயே கோலடித்து, லியோனுக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். என்றாலும் அதற்குப் பின் அந்த அணி பிடியை நழுவவிட, லிவர்பூல் ஆதிக்கம் செலுத்தத் ஆரம்பித்தது.

பிரேசில் வீரர் ரொபெர்ட்டோ பர்மினோ 17ஆவது நிமிடத்தில் கோலடித்தார். லியோன் வீரர் ஜோக்கிம் அண்டர்சன் 21ஆவது நிமிடத்தில் சொந்த கோல் அடிக்க, லிவர்பூல் முன்னிலைக்குச் சென்றது. அதன்பின் 22 வயதான வேல்ஸ் ஆட்டக்காரர் ஹேரி வில்சன் 53ஆவது நிமிடத்தில் கிட்டத்தட்ட 25 மீற்றர் தொலைவில் இருந்து அற்புதமானதொரு கோலை அடிக்க, லிவர்பூலின் வெற்றி உறுதியானது.

ஜெர்மனியின் சல்ஸ்பர்க் நகரில் நடந்த இன்னொரு நட்புமுறை ஆட்டத்தில் ரெட்புல் சல்ஸ்பர்க் அணியை செல்சி 5–3 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. செல்சி தரப்பில் கிறிஸ்டியன் புலிசிச் இரு கோல்களையும் ராஸ் பார்க்லி, பெட்ரோ, பட்வாயி ஆகியோர் ஆளுக்கு ஒரு கோலையும் போட்டனர். ஆட்டத்தின் 57ஆவது நிமிடத்தில் பின்னங்காலைக் கொண்டு பெட்ரோ அடித்த கோல், அவர் வாழ்நாளில் மறக்க முடியாத வகையில் அருமையான கோலாக இருந்தது.

இதனிடையே, தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வந்த முன்னணி ஸ்பானிய அணியான ரியல் மெட்ரிட், ஒருவழியாக வெற்றிப் பாதைக்குத் திரும்பியது பயிற்சியாளர் ஸிடானுக்கு நிம்மதி அளிப்பதாக அமைந்தது.

நட்சத்திர ஆட்டக்காரர் கரிம் பென்சிமா ‘ஹட்ரிக்’ கோலடிக்க, ரியெல் 5 – 3 என்ற கோல் கணக்கில் துருக்கியின் பெனர்பாச் குழுவை வீழ்த்தியது. இருப்பினும், ஐந்து நட்புமுறை ஆட்டங்களில் ரியெல் 16 கோல்களை விட்டுத் தந்திருப்பது கவலைக்குரிய அம்சமாகும்.

Sat, 08/03/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை