சீனாவை நாணய மதிப்பை திரிக்கும் ஒரு நாடாக அமெரிக்கா பிரகடனம்

சீனாவை “நாணய மதிப்பை திரிக்கும்” ஒரு நாடாக அமெரிக்கா உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இது உலகில் இரு பெரிய பொருளாதார நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் போரை மேலுத் தீவிரப்படுத்தும் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

டொலருக்கு எதிராக சீன யுவானின் பெறுமதி வீழ்ச்சி கண்டதை அடுத்தே அமெரிக்க கருவூலம் இந்த அறிவிப்பை வெளியிட்டது.

சந்தையில் தனக்கு சாதகமான சூழலை ஏற்படுத்துவதற்கு நாணய மதிப்பை குறைப்பதை சீனா வழக்கமாகக் கொண்டுள்ளது.

300 பில்லியன் டொலர் சீன இறக்குமதிகளுக்கு 10 வீத வரி விதிப்பது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால் டிரம்ப் அறிவித்ததை அடுத்து அதற்கு பதில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சீனா கடந்த வாரம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் 2008 ஆம் ஆண்டுக்குப் பின் முதல் முறையான கடந்த திங்கட்கிழமை அமெரிக்க டொலருக்கு எதிரான சீன யுவானின் மதிப்பு 7 வீதமாக பதிவானது. இதனை அடுத்து சீனா தனது நாணயத்தை சாதுர்யமாகக் கையாள்கிறது என்று டிரம்ப் ட்விட்டரில் குற்றம்சாட்டியிருந்தார்.

அமெரிக்காவிலிருந்து பில்லியன் கணக்கான டொலர்களை சீனா நீண்ட காலமாக எடுத்துச் செல்கிறது என்பதையே நாணய மதிப்பிறக்கம் காட்டுவதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

இப்படி நாணய மதிப்பிறக்கம் செய்வதன் மூலம், புதிய வரி விதிப்பிற்குப் பின்னரும் சீன இறக்குமதிப் பொருட்கள் அமெரிக்காவில் மலிவாகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் யுவானின் மதிப்பிறக்கத்தால் உலகம் முழுவதும் கடந்த திங்களன்று பங்குச்சந்தைகளில் கடும் சரிவு ஏற்பட்டது.

இதேவேளை ஆரோக்கியமான போட்டியை சீர்குலைக்கும் வகையில் நியாயமற்ற வகையில் சீனா நடந்துகொள்வதாக சர்வதேச நாணய நிதியத்திடம் புகார் அளிக்க உள்ளதாக அமெரிக்க நிதித்துறை தெரிவித்துள்ளது.

எனினும் அமெரிக்காவின் ஒருதலைப்பட்சமான போக்கு, வர்த்தகக் காப்புக் கொள்கைகள் மற்றும் வரி விதிப்பு உயர்வு காரணமாகவே யுவானின் நாணய மதிப்பு சரிந்துள்ளது என்றும் நாணய மதிப்பை நியாயமாகவும், சமநிலை தவறாலும் வைத்துக்கொள்ள தங்களால் முடியும் என்றும் சீன மத்திய வங்கி கூறியுள்ளது.

Wed, 08/07/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை