முறையற்ற கழிவகற்றலால் பாதிக்கப்படும் பிரதேச மக்கள்

தீர்வினை பெற்றுத் தருமாறு கோரிக்கை

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையினால் மேற்கொள்ளப்படும் முறையற்ற கழிவு முகாமைத்துவம் தொடர்பில் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். கரைச்சி பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட உமையாள்புரம் பகுதியில் இவ்வாறு முறையற்ற வகையில் கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றமையால் சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக தெரிவிக்கின்றனர்.

கழிவு முகாமைத்துவம், சுற்று சூழல் பாதுகாப்பு தொடர்பில் பல்வேறு தீர்மானங்கள் பல தரப்பாலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதிலும், கரைச்சி பிரதேச சபையினர் கழிவகற்றல் மற்றும் பாதுகாப்பான முறைகள் என்பன தொடர்பில் கவனம் செலுத்தவில்லை.

இதன் காரணமாக மக்கள் பெரும் அசளகரியங்களை எதிர்கொள்கின்றனர். குறித்த கழிவுகளிற்கு தீ வைத்துள்ளமையால் அப் பிரதேசம் புகை மண்டலமாக காணப்பட்டதுடன், கொட்டப்பட்ட கழிவுகளை கால்நடைகள், விலங்குகள் என பலவும் உணவாக உட்கொள்ளுகின்றன.

இந்த நிலையில் குறித்த கழிவுகள் கொட்டப்படும் பகுதியிலிருந்து சுமார் 500 மீட்டர்களிற்கு உட்பட்ட பகுதியில் வாழும் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கின்றனர்.

குறித்த கழிவகற்றல் முகாமைத்துவத்திற்கு நிரந்த தீர்வு எட்டப்படுவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டபோதிலும் அவை இடம்பெறவில்லை எனவும் தெரிவிக்கும் மக்கள், அதற்காக ஒதுக்கப்பட்ட பகுதி தவிர்ந்து ஏனைய பகுதிகளிலும் கழிவுகள் கொட்டப்படுவதாக தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக தாம் சுகாதார பிரச்சினைகளை எதிர்கொள்வதாகவும், நோய் தாக்கத்திற்கு உட்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். இவ் விடயம் தொடர்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு சுற்று சூழலை பாதுகாத்து கொடுக்க வேண்டும் என்பதே பிரதேச மக்களின் எதிர்பார்ப்பாகும்.

பரந்தன் குறூப் நிருபர்

Sat, 08/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை