நான் ஓர் இனத்திற்கான இராணுவத் தளபதியல்ல

நான் ஓர் இனத்திற்கு மாத்திரமான இராணுவத் தளபதியல்ல மாறாக இந்த நாட்டிலுள்ள அனைத்து இன மக்களுக்கும் நானே இராணுவத் தளபதி. நாட்டினதும் சகல இன மக்களினதும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டியது என்னை சார்ந்தது. அவற்றை இன, மத, பேதமின்றி சமமாக முன்னெடுப்பேன் என்றும் இந்த நாட்டிலுள்ள சகல இனத்தவர்களையும் எப்பொழுதும் சமமாகவே நடத்துவேன் என்று புதிய இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

நாட்டின் தேசிய பாதுகாப்பு, சகல இனங்களைச் சேர்ந்த பாதுகாப்பு, மக்களின் பாதுகாப்பு மற்றும் புலனாய்வு துறையினரின் மேம்பாடு ஆகியவற்றிற்கு முன்னுரிமையளித்து செய்படுவதே எனது பிரதான எதிர்பார்ப்பு என்று அவர் மேலும் தெரிவித்தார்.

குற்றச்சாட்டுக்களை முன்வைக்க, கருத்துக்களை கூற எவருக்கும் உரிமையுண்டு. என்றாலும் நாட்டின் தற்போதைய பாதிகாப்பு நிலைமையை கருத்திற் கொண்டு முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி என்மீது நம்பிக்கையை வைத்து என்னை நியமித்துள்ளார். அந்த நம்பிக்கையை உரிய முறையில் நான் நிறைவேற்றுவேன் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எதிர்வரும் 29ஆம் மற்றும் 30ஆம் திகதிகளில் இலங்கையில் நடைபெறவுள்ள கொழும்பு பாதுகாப்பு மாநாடு மற்றும் செப்டெம்பர் 3ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை நடைபெறவுள்ள முப்படையினர் பங்கு கொள்ளும் நீர்க்காகம் பயிற்சி தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விஷேட செய்தியாளர் மாநாடு கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் நடைபெற்றது. இதன் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் இராணுவத் தளபதி மேலும் விளக்கமளிக்கையில் :-

என் மீது பல குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதை அவதானிக்க கூடியதாக உள்ளது. ஆனால் அது உறுதிப்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு குற்றச்சாட்டுக்கள் ஒன்றும் முதற் தடவையானது அல்ல

மாறாக அவ்வப்போது மாறி மாறி முன்வைக்கப்பட்டு வருகின்ற ஒன்றாகும்.மன்னார் மனித புதைக்குழி தொடர்பிலும் இவ்வாறே குற்றச்சாட்டுக்கள் ஆரம்பத்தில் முன்வைக்கப்பட்டன. இறுதியில் அதன் நிலைமைய மாறுபட்டது என் அடையாளங்காண முடிந்தது.

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முன்வைக்கும் குற்றச்சாட்டு மற்றும் வடக்கு, கிழக்கிலுள்ள முகாம்கள் அகற்றுவது தொடர்பில் அவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் :-

அரசியல் பிரமுகர்கள் என்ற வகையில் கருத்துக்களை முன்வைக்கும் உரிமை அவர்களுக்கும் உண்டு அதனை நான் ஒருபோதும் தவறு என்று கூறப்போவதில்லை, அதேபோன்று வடக்கு, கிழக்கு மாத்திரமின்றி நாட்டின் எந்தப் பிரதேசத்திலாவது முகாம்கள் தேவையின்றி அமைப்பதில்லை, புலனாய்வு தகவல் மற்றும் தேசிய பாதுகாப்பை கருத்திற் கொண்டு திட்டமிட்ட அடிப்படையிலேயே தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும். எனவே, தற்போதைய நிலையில் எந்தவொரு முகாம்களையும் அகற்றும் நோக்கம் இல்லை என்றார்.

 

ஸாதிக் ஷிஹான்

Tue, 08/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை