எதிர்க்கட்சி தலைவர் பதவியில் மஹிந்த நீடிப்பதற்கு ஆட்சேபனை

ஆளுந்தரப்பு, தமிழ்தேசியக் கூட்டமைப்பு இன்று சபையில் ஆட்சேபிக்க தீர்மானம்

பாராளுமன்றம் பரபரப்பான சூழ்நிலையில் இன்று (20) பிற்பகல் கூடுகிறது. பொது ஜனப் பெரமுன மற்றும் தேசிய மக்கள் சக்தி என்பவற்றின் ஜனாதிபதி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு ஐ.தே.க தலைமையிலான வேட்பாளர் தொடர்பிலான இழுபறி நிலை நீடிக்கும் நிலையில், பல சர்ச்சைகள் இன்று (20) பாராளுமன்றத்தில் எதிரொலிக்குமென அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பொதுஜன பெரமுனவின் புதிய தலைவராக முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்‌ஷ கடந்த வாரம் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டார்.இந்த நிலையில் அவர் எதிர்க்கட்சி தலைவர் பதவியையும் எம்.பி பதவியையும் வகிக்க தகுதியில்லை என இன்று ஆளும் தரப்பும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஆட்சேபனை முன்வைக்க இருப்பதாக அறிய வருகிறது. ஐ.ம.சு.முவிலிருந்து பாராளுமன்றம் தெரிவான அவர், அரசிலிருந்து ஐ.ம.சு.மு வெளியேறியதையடுத்து எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார்.

ஆனால் வேறு கட்சியொன்றின் தலைவராக அவர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்க் கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்‌ஷ பதவி வகிக்க முடியாதென ஆளும் தரப்பு கூறியுள்ளது. அவரை எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து நீக்குமாறு சபாநாயகரை கோர, ஐ.தே.க தலைமையிலான ஆளும் தரப்பு எம்.பிக்கள் திட்டமிட்டுள்ளதாக நம்பகமாக அறிய வருகிறது.

இதே வேளை, ல.சு.க தலைமையிலான ஐ.ம.சு.மு அவருக்கு எதிராக எந்த ஒழுக்காற்று நடவடிக்கையும் எடுக்காதென ஐ.ம.சு.மு செயலாளர் மஹிந்த அமரவீர அறிவித்துள்ளார். தற்போதைய சூழலில் மஹிந்தவை எதிர்க்கட்சி தலைவர்

பதவியில் இருந்து நீக்குவது உகந்ததல்ல எனவும் அவரை அகற்றுவதற்கு ஆதரவு வழங்கப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.ம.சு.மு செயலாளரால் சபாநாயகருக்கு வழங்கப்பட்ட கடிதத்தின் பிரகாரமே ஐ.ம.சு.மு பாராளுமன்ற குழு தலைவராகவும் எதிர்க்கட்சித் தலைவராகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கடந்த வருட இறுதியில் நியமிக்கப்பட்ட து குறிப்பிடத்தக்கது.

தெரிவுக்குழுவின் காலம் நீடிப்பு

இதே வேளை ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட விசேட பாராளுமன்ற தெரிவுக்குழுவின் காலம் மேலும் ஒரு மாத காலத்தால் நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 23 ஆம் திகதி இதன் காலம் நிறைவடைய உள்ள நிலையில், தெரிவுக்குழுவின் கோரிக்கைக்கு அமைய சபாநாயகர் மேலும் ஒரு மாதத்தால் காலத்தை நீடித்துள்ளதாக அறிய வருகிறது. பாதுகாப்பு உயரதிகாரிகள், அமைச்சர்கள், பிரதமர் உட்பட பலர் இங்கு சாட்சியமளித்துள்ளனர்.இந்நிலையில் இறுதியாக ஜனாதிபதி விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். ஆனால் அவர்,இங்கு சமூகமளிக்க மாட்டாரெனவும் அறியவருகிறது.(பா)

 

Tue, 08/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை