கடற்படை, விமானப்படை பதவி உயர்வு தொடர்பில் பீல்ட் மார்ஷல் விளக்கம்

விமானப்படை மற்றும் கடற்படையின் அதியுயர் பதவிகளான 'மார்ஷல் ஒப் த எயார்' மற்றும் 'மார்ஷல் ஒப் த பிலீட்' ஆகிய பதவிகளை ஓய்வுபெற்ற விமானப்படை மற்றும் கடற்படைத் தளபதிகளுக்கு வழங்கியமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் தனது கருத்தை முன்வைத்துள்ளார்.

எல்.ரி.ரி.ஈக்கு எதிரான யுத்த காலத்தில் கடற்படைத் தளபதியாகவிருந்த கரன்னாகொட மற்றும் விமானப்படைத் தளபதியாகவிருந்த ரெஷான் குணதிலக ஆகியோரை கௌரவ உயர் பதவிகளான 'மார்ஷல் ஒப் த எயார்' மற்றும் 'மார்ஷல் ஒப் த பிலீட்' ஆகியவற்றுக்கு ஜனாதிபதி நியமித்திருந்தார். இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி அண்மையில் வெளியிட்டிருந்தார். இது தொடர்பில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தனது நிலைப்பாட்டை ஊடகவியலாளர்களுடன் பகிர்ந்துகொண்டார்.

இந்த உயர் பதவிகளை வழங்குவதற்கான முழுமையான அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது. யுத்த காலத்தில் விமானப்படைத் தளபதியாகவிருந்தவருக்கும், கடற்படைத் தளபதியாகவிருந்தவருக்கும் இந்த உயர் பதவிகளை வழங்க ஜனாதிபதி எடுத்த தீர்மானத்தை நான் விமர்சிக்கவில்லை. எனினும், இந்த உயர்பதவிகளை வழங்குவதற்கான கொள்திறன் அவர்களிடம் இருந்ததா? என்ற கேள்வி இருப்பதாகவும் கூறினார்.

கடற்படையில் அதிஉயர் பதவியான 'மார்ஷல் ஒப் த பிலீட்' என்ற பதவி மிகவும் உயரிய பதவியாகும். இந்தப் பதவியைப் பெறுவதற்கு ஆகக் குறைந்தது 150 போர் கப்பல்கள், 9 நீர்மூழ்கிக் கப்பல்கள் ஆகக் குறைந்தது ஒரு விமானம் தாங்கிக் கப்பலைக் கொண்ட கடற்படைக் குழுவுக்கு கட்டளையிடும் அதிகாரியாகச் செயற்பட்டிருக்க வேண்டும்.

எனினும் இலங்கை கடற்படையில் இரண்டு ஆழ்கடல் செல்லும் கப்பல்கள் மாத்திரமே உள்ளன. இது தவிரவும் சிறிய டோரா போன்ற படகுகளே எம்மிடம் உள்ளன. கப்டன் பதவியில் இருக்கும் ஒரு அதிகாரி இவை அனைத்துக்கும் கட்டளையிட முடியும். இவ்வாறான சூழ்நிலையில் கரன்னாகொடவுக்கு 'மார்ஷல் ஒப் த பிலீட்' பதவி வழங்குவது பொருத்தமானதா? என்ற கேள்வி உள்ளது எனவும் குறிப்பிட்டார்.

அதேபோல இலங்கை விமானப் படையிடம் 11 போர் விமானங்களும், 10ற்கும் அதிகமான யுத்த ஹெலிகொப்டர்களுமே காணப்படுகின்றன.

இந்தியாவிடம் 2000ற்கும் அதிகமான விமானங்களும், இஸ்ரேலில் 5000ற்கும் அதிகமான விமானங்களும் காணப்படுகின்றன. இந்த நாடுகள் யுத்தத்துக்குச் செல்லும்போது வானில் முகில்கள் தெரியாதளவுக்கு விமானங்கள் பறக்கும்.

இவ்வாறான நிலையில் விமானப்படைத் தளபதியாகவிருந்தவருக்கு 'மார்ஷல் ஒப் த எயார்' பதவி வழங்கப்பட்டதிலும் கேள்வி உள்ளது என்றார்.

எனினும், தனது கட்டுப்பாட்டின் கீழ் 2 இலட்சத்துக்கும் அதிகமான இராணுவ வீரர்கள் இருந்ததால் தனக்கு பீல்ட் மார்ஷல் பதவி வழங்கியது நியாயமானது என்றும் சுட்டிக்காட்டினார்.

மகேஸ்வரன் பிரசாத்

 

Thu, 08/15/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை