ஹொங்கொங் எல்லையில் சீன இராணுவம் அணிவகுப்பு

ஹொங்கொங் எல்லையை ஒட்டிய சீன நகரத்தில் இருக்கும் விளையாட்டு அரங்கு ஒன்றில் ஆயிரக்கணக்கான சீன இராணுத்தினர் அணிவகுப்பு ஒன்றை நேற்று நடத்தினர்.

ஷென்சென் நகரில் இருக்கும் அந்த அரங்கிற்குள் கவச வாகனங்களும் குவிக்கப்பட்டுள்ளன. ஹொங்கொங்கில் 10 வாரங்களாக நீடிக்கும் பதற்றத்திற்கு மத்தியில் அந்த நகரில் சீனா தலையிடும் சூழல் அதிகரித்திருக்கும் நிலையிலேயே இந்த அணிவகுப்பு இடம்பெற்றுள்ளது.

மத்திய இராணுவ ஆணையத்தின் கீழ் செயற்படும் இராணுவப் பொலிஸார் ஷென்சென் நகரில் ஒன்று கூடியதாக சீன அரச ஊடகம் இந்த வாரம் செய்தி வெளியிட்டிருந்தது.

இந்த மைதானம் ஹொங்கொங்கில் இருந்து சுமார் 7 கிலோமீற்றர் தொலைவிலேயே உள்ளது.

“இவர்கள் ஏன் இங்கு இருக்கிறாரர்கள் என்று தெரியவில்லை. ஹொங்கொங் தொடர்பாக இருக்கக் கூடும்” என்று அந்த விளையாட்டு அரங்கில் டிக்கெட் விற்பவர் ஒருவர் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு குறிப்பிட்டுள்ளார்.

“இத்தனை பெரிய கூட்டம் ஒன்றை நான் பார்ப்பது இது தான் முதல் தடவை” என்று அந்த அரங்கிற்குள் உள்ள மையம் ஒன்றின் வரவேற்பாளர் யங் யிங் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு இராணுவத்தினர் மற்றும் கவச வாகனங்கள் குவிக்கப்பட்டிருப்பது குறித்து விளக்கமளிக்க நகர அதிகாரிகளும் தவறியுள்ளனர்.

இராணுவத்தினர் ஷென்செனில் குவிக்கப்பட்டது குறித்த வீடியோக்களை சீனாவின் பலம்கொண்ட அரசு ஊடகங்களான பீபல்ஸ் டெய்லி மற்றும் கிளோபல் டைம்ஸ் வெளியிட்டுள்ளன.

திட்டமிடப்பட்ட இராணுவ பயிற்சிக்காக கவச வாகனங்கள் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் மற்றபடி ஹொங்கொங்கில் நடக்கும் ஆர்ப்பாட்டத்திற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் சீனா தெரிவித்துள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்கிடையே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், சீன அரசாங்கம் ஹொங்கொங் எல்லையை ஒட்டிய பகுதிக்கு அதன் இராணுவ வீரர்களை அனுப்பி வருவதாக அமெரிக்க உளவுத் துறையினர் நம்புவதாக ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

1997 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் இடம் இருந்து சீனாவிடம் ஹொங்கொங் கையளிக்கப்பட்டதன் பின் இடம்பெறும் மோசமான பிரச்சினையான தற்போதைய நிலை மாறி வருகிறது.

குற்றம் இழைத்தோரை சீனாவுக்கு நாடுகடத்துவது குறித்த சட்டமூலத்திற்கு எதிராக கடந்த ஜுன் மாதம் ஆரம்பமான ஆர்ப்பாட்டம், அந்த சட்டமூலம் திரும்ப பெறப்பட்ட பின்னரும் தொடர்ந்து நீடித்து வருகிறது.

Fri, 08/16/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை