ஹொங்கொங் விமான நிலைய விமான சேவைகள் ஆரம்பம்

ஆர்ப்பாட்டம் தணிந்தது:

ஹொங்கொங் விமான நிலை யத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் தணிந்த நிலையில் நேற்று மீண்டும் விமான சேவைகள் ஆரம்பித்துள்ளன.

விமான நிலையத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்டதை அடுத்து கடந்த செவ்வாய்க்கிழமை நூற்றுக்கணக்கான விமான பயணங்கள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் பல விமானங்கள் நேற்று திட்டமிட்டபடி தனது பயணங்களை ஆரம்பித்தபோதும் மேலும் சில தொடர்ந்து தாமதம் அல்லது ரத்துச் செய்யப்பட்டுள்ளன.

நள்ளிரவில் இருந்து 12க்கும் மேற்பட்ட விமானங்கள் புறப்பட்டுச் சென்றதாக விமான நிலையத்தின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து புறப்பட இருக்கும் விமானங்களின் அட்டவணைப்பட்டியலும் வெளியிடப்பட்டிருந்தது.

சில போராட்டக்காரர்கள் மட்டும் விமான நிலையத்தினுள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் விமான சேவையை தடுக்காத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விமான நிலையத்தின் பதிவு செய்யும் பகுதி வழக்கம் போல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹொங்கொங்கில் சர்ச்சைக்குரிய கைதிகள் பரிமாற்றச் சட்டத்திருத்த சட்டமூலத்திற்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. 10ஆவது வாரத்தை எட்டியுள்ள இந்தப் போராட்டத்தில், கடந்த ஞாயிற்றுக்கிழமை போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே பயங்கர வன்முறை வெடித்தது.

இதில் கடந்த திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் பொலிஸாருக்கு இடையிலான மோதல்கள் காரணமாக பெரும் எண்ணிக்கையான விமானங்கள் ரத்துச் செய்யப்பட்டன.

பொலிஸாரின் அடக்குமுறைக்கு எதிராக தமது கோபத்தை வெளியிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் கடந்த செவ்வாய்க்கிழமையும் விமான நிலைத்திற்கு திரும்பியதால் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாகவும் விமான சேவைகளை ரத்துச் செய்ய நிர்வாகம் முடிவெடுத்தது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் பயங்கரவாதிகள் போன்று செயற்படுவதாக ஹொங்கொங் மற்றும் மக்காவோவுக்கான சீன நிர்வாகம் நேற்று கண்டித்திருந்தது.

Thu, 08/15/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை