இலங்கை கிரிக்கெட் அணி தேர்வுக் குழுவில் மாற்றம்

இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழுவில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அதன்படி, இலங்கை தேர்வுக்குழுவில் இருந்து பிரெண்டன் குருப்பு மற்றும் ஹேமந்த விக்ரமரத்ன ஆகியோர் நீக்கப்பட்டு, அசந்த டி மெல் மற்றும் சமிந்து மெண்டிஸ் ஆகியோரின் ஒப்பந்தக்காலம் மேலும் ஒரு வருடத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

கிரேம் லெப்ரோய் தலைமையிலான இலங்கை தேர்வுக்குழு நீக்கப்பட்டு, அசந்த டி மெல் தலைமையிலான நான்கு பேர் கொண்ட தேர்வுக்குழு கடந்த வருடம் நவம்பர் 4ஆம் திகதி நியமிக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது நியமிக்கப்பட்டுள்ள தேர்வுக்குழுவில் அசந்த டி மெல் மற்றும் சமிந்து மெண்டிஸ் ஆகியோர் மாத்திரம் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

அசந்த டி மெல் தேர்வுக்குழு தலைவராக செயற்படுவதுடன், இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளராகவும் செயற்பட உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், அறிவிக்கப்பட்டுள்ள தேர்வுக்குழுவில் புதிய ஒருவராக முன்னாள் இலங்கை வீரர் வினோதன் ஜோன் இணைக்கப்பட்டுள்ளார். புதிய தேர்வுக்குழு தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிடுகையில்,

“இலங்கை தேர்வுக்குழு தலைவராக அசந்த டி மெல் தொடர்ந்தும் செயற்படுவதுடன், அவர் இலங்கை அணியின் முகாமையாளராகவும் செயற்படுவார். அத்துடன், அசந்த டி மெல் மற்றும் சமிந்து மெண்டிஸ் ஆகியோரின் ஒப்பந்தக்காலம் ஒருவருடத்துக்கு நீடிக்கப்படும் என்பதுடன் தேர்வுக்குழுவில் புதிதாக வினோதன் ஜோன் இணைக்கப்பட்டுள்ளார்” என்றார்.

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி எதிர்வரும் 14ஆம் திகதி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள நிலையிலேயே இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Thu, 08/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை