கிழக்கு மாகாண விளையாட்டு விழா அட்டாளைச்சேனையில் நேற்று ஆரம்பம்

அட்டாளைச்சேனை விசேட,ஒலுவில் கிழக்கு,ஒலுவில் விசேட,அட்டாளைச் சேனை மத்திய, அம்பாறை சுழற்சி நிருபர்கள்

கிழக்கு மாகாண விளையாட்டு விழா அட்டாளைச்சேனை அஸ்ரப் ஞாபகார்த்த பொது விளையாட்டு மைதானத்தில் நேற்று(31) ஆரம்பமானது.

45வது தேசிய விளையாட்டு விழாவை முன்னிட்டு இடம்பெறுகின்ற கிழக்கு மாகாண விளையாட்டு விழாவில் கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உத்தியோக பூர்வமாக ஆரம்பம் செய்து வைத்தார்.

மாகாண விளையாட்டுத்துறை திணைக்களத்தின் பணிப்பாளர் என்.எம்.நௌபில் தலைமையில் இடம்பெற்ற இவ்வாரம்ப நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் எம்.எம்.எம்.அன்சார், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி, பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எல்.அமானுல்லா, அக்கரப்பற்று பொலிஸ்நிலை பொறுப்திகாரி கே.பண்டார மற்றும் விளையாட்டு திணைக்களத்தின் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி வீர,வீராங்கனைகள் போட்டிளில் கலந்து கொண்டனர்.

நேற்று புதன்கிழமை மற்றும் இன்று(01) வியாழக்கிழமை ஆகிய இரு தினங்களுக்கு இடம்பெறவுள்ள இவ்விளையாட்டு விழாவில் மாவட்ட மட்டத்தில் இடம்பெற்ற போட்டி நிகழ்ச்சிகளில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்று வெற்றி பெற்ற வீர,வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர்.

புனரமைக்கப்பட்டுள்ள அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் இரண்டாம் நாளான இன்று(01) இடம்பெறவுள்ள இறுதிநாள் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழா, கிழக்கு மாகாண கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜீ. முத்துபண்டா தலைமையில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் சான் விஜயலால் டி சில்வா கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார். கௌரவ அதிதிகளாக சமூக வலுவுட்டல் அமைச்சர் தயாக கமகே, பெற்றோலிய வலத்துறை அமைச்சர் அனோமா கமகே, பாராளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசீம், எச்.எம்.எம்.ஹரீஸ்,எம்.ஐ.எம்.மன்சூர், எஸ்.எம்.எம்.இஸ்மாயில், சிறியானி விஜேயவிக்ரம, விமலவீர திஸாநாயக்க, அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எல்.அமானுல்லா மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், மாவட்ட அரசாங்க அதிபர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.

கிழக்கு மாகாண விளையாட்டு விழாவில் குழு நிலைப்போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் மெய்வல்லுநர் போட்டிகளே நேற்று முதல் இன்று வரை நடைபெற்று வருகின்றன.

கிழக்கு மாகாண விளையாட்டு விழாவிற்கான ஏற்பாடுகளை கிழக்கு மாகாண விளையாட்டுத்திணைக்கள பணிப்பாளர் நௌபீஸ் தலைமையில் விளையாட்டுத்துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

கிழக்கு மாகாண விளையாட்டு விழா அட்டாளைச்சேனையில் இடம்பெறுவது இது இரண்டாவது முறையாகும். 2012 ம் ஆண்டு முதல் தடவையாக அட்டாளைச்சேனையில் கிழக்கு மாகாண விளையாட்டு விழா இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

கிழக்கு மாகாண விளையாட்டு விழாவில் வெற்றி பெறும் வீர,வீராங்கனைகள் ஓக்டோபர் மாதம் ஆரம்பத்தில் பதுளையில் இடம்பெறவுள்ள 45வது தேசிய விளையாட்டு விழாவில் பங்குபற்றவுள்ளனர்.

Thu, 08/01/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை