பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் ஆறு மாதங்கள் பங்கேற்கவில்லை

தெரிவுக்குழு முன்னிலையில் பிரதமர் சாட்சியம்

பயங்கரவாதம் ஒழிக்க முடியாத ஒரு புற்றுநோய்

பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் ஆறு மாதங்கள் பங்குபற்றவில்லையென்றும் புற்றுநோயான பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதற்குத் தேவையான நடவடிக்ைக எடுக்க வேண்டும் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் நேற்று(06) பிரதமர் அளித்த சாட்சியம் வருமாறு.

பிரதி சபாநாயகர் கேள்வி:- தாக்குதல் தொடர்பில் பல்வேறு விடயங்கள் கூறப்படுகிறது.புலனாய்வு தகவல்கள் உங்களுக்கு எவ்வாறு கிடைக்கிறது?

பதில்:- வாரத்தில் 2,3 தடவைகள் சட்டம் ஒழுங்கு அமைச்சரினால் எனக்கு அறிக்கை கிடைக்கும். ஐ.எஸ்ஸிற்கு ஒத்துழைப்பு வழங்கும் நபர்கள் பற்றிய தகவல்களும் எமக்கு கிடைத்தன. முதற்தடவையாக சிரியா சென்று இறந்த நபர் பற்றிய தகவல் தாமதமாக கிடைத்தது. அதன் பின்னர் இறந்த நபர் பற்றியும் தகவல் கிடைத்தது.சிலர் சிரியா சென்று வந்துள்ளதோடு அவர்கள் பற்றி புலனாய்வுப் பிரிவு தகவல் திரட்டியது. ஆனால் பயங்கரவாத செயற்பாடுகள் குறித்து தகவல் கிடைக்கவில்லை. பல்வேறு விடயங்கள் குறித்தும் சட்டம், ஒழுங்கு அமைச்சு எனக்கு தகவல் வழங்கும்.

பிரதி சபாநாயகர் கேள்வி:- அடிப்படைவாத அமைப்புகள் குறித்து புலனாய்வு தரப்பு உங்களை அறிவூட்டியதா?

பதில்:- பாதுகாப்பு சபையில் இது பற்றி ஆராயப்பட்டது. சட்டம், ஒழுங்கு அமைச்சர் சகல விடயங்கள் குறித்தும் அறிவூட்டினார்.

ரவி கருணாநாயக்க கேள்வி :- சகல பாதுகாப்பு சபை கூட்டங்களிலும் பங்குபற்றியுள்ளீர்களா?

பதில்:- 2018 ஒக்டோபர் மாதம் வரை பாதுகாப்பு சபைக்கு அழைப்பு வந்தது. அனேகமானவற்றில் பங்குபற்றியுள்ளேன். அதன்பின்னர் அழைப்பு வரவில்லை. இது பற்றி ஆராய்ந்த போது பெப்ரவரி மாதத்தின் பின்னர் பாதுகாப்பு சபை கூடவில்லை என அறிந்தேன்.

ரவி கருணாநாயக்க கேள்வி:- பாதுகாப்பு சபைக்கு அழைக்கப்படவில்லை என வினவினீர்களா?

பதில்:- இல்லை.பாதுகாப்பு சபை கூடவில்லை என அறிந்தேன்.தன்னையும் அழைக்கவில்லை என பொலிஸ் மாஅதிபர் என்னிடம் கூறினார்.

ரவி கருணாநாயக்க கேள்வி:- பாதுகாப்பு சபைக்கு செல்லாமல் எவ்வாறு பாதுகாப்பு தொடர்பான தகவல்களை பெற்றீர்கள்?

பதில்:- பாதுகாப்பு சபையை விட சட்டம், ஒழுங்கு அமைச்சினூடாக தான் தகவல்களை பெற்றேன்.பாதுகாப்பு சபையில் தேசிய பாதுகாப்பு குறித்த தகவல்கள் பரிமாறப்பட்டது.

ரவி கருணாநாயக்க கேள்வி:- முப்படையிலிருந்து உங்களுக்கு தகவல் வந்ததா? 2014 ஆம் ஆண்டு முதல் மத அடிப்படைவாதம் பற்றி தகவல் பரிமாறப்பட்டுள்ளது?

பதில் : சட்டம், ஒழுங்கு அமைச்சினூடாக தான் தகவல் வந்தது.முப்படை தகவல்கள் பாதுகாப்பு சபையில் தான் கிடைத்தது.

ரவி கருணாநாயக்க கேள்வி:- காத்தான்குடியில் அடிப்படைவாதம் இருப்பது குறித்தும் இலங்கை தனித்துவத்திற்கு முரணான விடயங்கள் இடம்பெறுவதாகவும் தகவல் கிடைத்ததா?

பதில்:- காத்தான்குடி தான் அடிப்படைவாதத்தின் மத்திய நிலையமாக இருப்பதாக தகவல் கிடைத்தது.அரசியல் ரீதியான விடயங்கள் தொடர்பில் அரசியல்வாதிகளினூடாக கையாண்டேன்.2018 ஆம் ஆண்டில் இருந்து சஹ்ரான் குறித்து தேடப்பட்டது. அவர் தலைமறைவாகியிருந்தார்.

ரவி கருணாநாயக்க கேள்வி:- புலனாய்வு தகவல்களை பரிமாற்றுவதில் குறைபாடு காணப்படுகிறதா?

பதில் :- பாதுகாப்பு சபையில் புலனாய்வு தகவல்கள் பரிமாறப்படுகிறது.தகவல் பரிமாற்றம் எவ்வளவு தூரம் நடந்தது என்று தெரியாது.

ரவி கருணாநாயக்க கேள்வி: துருக்கி தூதுவர் தமது நாட்டு அமைப்பு குறித்து அறிவூட்டியிருந்ததா?

பதில்: துருக்கி தூதுவர் என்னுடன் கதைத்தார். தமது நாட்டு அமைப்பு பற்றி கூறினார்.பாதுகாப்பு பிரச்சினை எதுவும் எழவில்லை என பாதுகாப்பு தரப்பு கூறியது.புலனாய்வு தகவல் எதுவும் கிடைக்கவில்லை.ஐ.எஸ் தொடர்பில் அமெரிக்கா,இந்தியா போன்ற நாடுகளில் இருந்து தகவல் கிடைத்தது.

நளிந்த ஜயதிஸ்ஸ கேள்வி:- பாதுகாப்பு சபையில் இருக்க வேண்டிய உறுப்பினர்கள் யார்?

பதில்: நான் இருந்த அரசாங்கங்களில் ஜனாதிபதி பிரதமர் பாதுகாப்பு அமைச்சர், சட்டம், ஒழுங்கு அமைச்சர், பாதுகாப்பு செயலாளர்,முப்படை தளபதி,புலனாய்வு பிரதானிகள், பொலிஸ் மாஅதிபர், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சிலவேளை நீதி அமைச்சின் செயலாளர் கலந்து கொள்வர்.

நளிந்த ஜயதிஸ்ஸ கேள்வி:- நீங்கள் பிரதமராக செயலாற்றிய காலப்பகுதிகளில் இம்முறை தானா முதற்தடவையாக 6 மாதங்கள் பாதுகாப்பு சபை கூட்டத்தில் பங்கேற்கவில்லை.?

பதில்:- பெபப்ரவரி மாதத்தின் பின்னர் பாதுகாப்பு சபை கூடவில்லை பாதுகாப்பு சபை மாதம் ஒரு தடவை கூடும் சில வேளை 3 வாரம் 5 வாரத்திற்கு ஒரு தடவை கூட கூடும்.

நளிந்த ஜயதிஸ்ஸ கேள்வி:- 2018 ஒக்டோபரின் பின்னர் தேசிய பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதா?

பதில்:- ஆர்ப்பாட்டங்கள். வேலைநிறுத்தங்கள்.எல்.ரீ.ரீ.ஈ தலைதூக்குகிறதா? ஐ.எஸ். ஆதரவான குழுக்கள் என்பன குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

நளிந்த ஜயதிஸ்ஸ கேள்வி:- 2015 இலிருந்து 2018 வரை அடிப்படைவாத குழுக்கள் பற்றி முஸ்லிம் அமைப்புகளும் மௌலவிமாறும் தகவல் வழங்கியுள்ளனர். ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை?

பதில் : பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு இது தொடர்பில் அறிவூட்டப்பட்டது. இரு பள்ளிவாசல்களுக்கு இடையிலான பிரச்சினையே காணப்பட்டது. பயங்கரவாத தடுப்பு பிரிவு விசாரணை நடத்தியது.சட்ட மாஅதிபர் திணைக்களமும் இது தொடர்பில் அறிவித்திருந்தது.2018 இல் சஹ்ரானை கைது செய்ய உத்தரவு பெறப்பட்டது.சஹ்ரான் வெளிநாடு சென்றதாக கூறப்பட்டது. இந்தியா சென்றதாகவும் கூறப்பட்டது.

நளிந்த ஜயதிஸ்ஸ கேள்வி:- அம்பாறை மற்றும் திகன சம்பவங்களின் போது சட்டம், ஒழுங்கு அமைச்சராக நீங்கள் செயற்பட்டீர்கள்.இதன் பின்னர் அடிப்படைவாத குழுக்கள் வளர்ச்சி கண்டதா என்பது குறித்து ஆராய்ந்தீர்களா?

பதில்:- இந்தச் சம்பவங்களின் பின்னர் சிரியாவிற்கு சென்று வந்த குழுக்கள் தொடர்பாக ஆராயப்பட்டது.தாக்குதல்கள் தொடர்பில் இவர்கள் கோபத்துடன் இருந்துள்ளார்கள்.

நளிந்த ஜயதிஸ்ஸ கேள்வி:- தௌஹீத் ஜமாஅத் அமைப்பை தடைசெய்வது பற்றி பாதுகாப்புச் சபை கவனம் செலுத்தவில்லையா?

பதில்:- முதலில் இந்த அமைப்புக்கு எதிராக வழக்குத் தொடர்வதற்கான காரணத்தைத் தேடிப்பார்க்கவேண்டியிருந்தது. இதன்போது பாயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் அவர்கள் பற்றி எமக்கு அறிக்கை கிடைத்தது.

நளிந்த ஜயதிஸ்ஸ கேள்வி:- மதரஸா பாடசாலைகளை கண்காணிப்பதற்கு நடவடிக்கை இருக்கவில்லையா?

பதில்:- மதரஸா பாடசாலைகளை கண்காணிக்கும் பொறுப்பு முஸ்லிம் விவகார அமைச்சுக்கு வழங்கப்பட்டிருந்தது. மதரஸா பாடசாலைகளில் கற்பிக்கவரும் நபர்கள் பற்றி எமக்கு முன்னர் எந்தவிதமான அறிக்கையும் கிடைத்திருக்கவில்லை. குண்டுத் தாக்குதல்களின் பின்னர் உள்விவகார அமைச்சு குறிப்பிட்ட எண்ணிக்கையைக் கொண்ட வெளிநாட்டவர்கள் நாட்டுக்குள் வந்திருப்பதாக அறிக்கையிட்டிருந்தது. அதன் பின்னரே எமது கவனம் செலுத்தப்பட்டு அவ்வாறானவர்களை திருப்பியனுப்ப நடவடிக்கை எடுத்தோம்.

நளிந்த ஜயதிஸ்ஸ கேள்வி :- அரபுமொழிப் பயன்பாடு தொடர்பில் உங்களுக்கு அறிவிக்கப்பட்டதா?

பதில்:- அரபு மொழிப் பயன்பாடு தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டபோது அரசாங்க அலுவலகங்களிலோ அல்லது மாகாண நிறுவனங்களிலோ அவ்வாறான அரபுமொழிப் பயன்பாடு இல்லையென்றே பதில் வழங்கப்பட்டது. தனியார் நிறுவனங்களில் அவ்வாறான பயன்பாடு இருந்திருக்கலாம்.

நளிந்த ஜயதிஸ்ஸ கேள்வி:- இந்தக் குழு அடிப்படைவாதத்திலிருந்து அப்பால் செல்லத் தொடங்கியிருந்தார்கள். வவுனதீவு பொலிஸ் படுகொலை, மாவனல்ல தாக்குதல் போன்ற சம்பவங்களை குறிப்பிடப்படலாம். இதுபற்றி ?

பதில்: இதுபற்றிக் கலந்துரையாடினோம். குறிப்பாக அமைச்சர் கபீர் ஹாசிம் தனது செயலாளர் தாக்கப்பட்ட சம்பவம் பற்றிக் கூறியிருந்தார். பொலிஸ் அதிகாரிகளின் படுகொலையுடன் இவர்களுடைய தொடர்பு இருப்பதாக அறிக்கையிடப்பட்டிருக்கவில்லை. கபீர் ஹாசிம் அமைச்சரின் செயலாளர் மீதான தாக்குதலுடன் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது.

நளிந்த ஜயதிஸ்ஸ கேள்வி:- புலனாய்வுத் தகவல் பற்றி நடவடிக்கை எடுக்கப்படவில்லையென கருதுகின்றீர்களா

பதில்: வண்ணாத்திவில்லு தொடர்பில் அறிக்கையிடப்பட்டிருந்ததுடன் அதுபற்றி விசாரணை நடத்தப்பட்டுக்கொண்டிருந்தது. வழக்குத் தொடர்வதற்குப் போதுமான சாட்சிகள் இருந்தனவா என்பது பற்றித் தெரியாது. அமைச்சர் கபீர் ஹாசிமிடமும், பொலிஸ் மாஅதிபரிடமும் நான் தொடர்ச்சியாக ஆராய்ந்து வந்தேன். போதியளவு சாட்சி இருந்ததா என்பது பற்றித் தெரியாது. பொலிஸாரின் படுகொலையுடன் இவர்களின் தொடர்பு இல்லாவிட்டாலும் கிழக்கு மாகாணத்தில் தேடிப்பார்க்குமாறு கூறியிருந்தேன்.

நளிந்த ஜயதிஸ்ஸ கேள்வி:- ஏப்ரல் 9ஆம் திகதி அனுப்பப்பட்ட புலனாய்வு எச்சரிக்கை உங்களுக்குக் கிடைக்கவில்லையா?

பதில்:- தாக்குதலின் முன்னர் எனக்கு கிடைக்கவில்லை. பாதுகாப்புத் தரப்பினருக்கு அனுப்பப்பட்ட கடிதம் எனது பாதுகாப்புப் பிரிவுக்கும் கிடைக்கவில்லை. பிரதமர் பாதுகாப்புப் பிரிவுக்கும் கிடைக்கவில்லை. பொலிஸ் மாஅதிபரும் பின்னர் இதனை ஏற்றுக் கொண்டிருந்தார்.

நளிந்த ஜயதிஸ்ஸ கேள்வி:- தாக்குதலுக்கு முன்னரான தினத்தில் கூட தாக்குதல்கள் நடத்தப்படலாம் என தகவல்கள் கிடைத்திருந்தன. ஏப்ரல் 20, 21ஆம் திகதி உங்களுக்கு அவ்வாறான தகவல்கள் தெரியப்படுத்தப்பட்டதா?

பதில்: எனது பாதுகாப்பு பிரிவுக்கு எந்தவித தகவலும் தெரியப்படுத்தப்படவில்லை. கடிதம் அனுப்பப்பட்டிருந்தால் நான் பொலிஸாரிடம் கேட்டிருப்பேன். சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் நான் கொழும்பில் இருக்கவில்லை. கொழும்பு திரும்பிய பின்னர் இதுபற்றியே எனக்குத் தகவல்கள் கிடைத்தன.

நளிந்த ஜயதிஸ்ஸ கேள்வி:- தகவல் பொறிமுறையில் குறைபாடு உள்ளதா?

பதில்: 9ஆம் திகதியின் பின்னர் விடுமுறைகாலம் என்பதால் அதிகாரிகள் பலர் வெளிமாவட்டங்களுக்குச் சென்றிருந்ததால் நடவடிக்கை எடுப்பதில் குறைபாடுகள் இருந்திருக்கலாம்.

நளிந்த ஜயதிஸ்ஸ கேள்வி :- அரசாங்க புலனாய்வு சேவையின் தலைவருக்கும் உங்களுக்கு தகவல்களை வழங்குவாரா?

பதில்:- அரசாங்க புலனாய்வுப் பிரிவின் தலைவரிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு தகவல்களை வழங்குமாறு கூறியிருந்தேன். 21ஆம் திகதி தாக்குதல் நடைபெறுவது தொடர்பில் எனக்கு எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

ஜயம்பதி விக்ரமரட்ண: பாதுகாப்புச் சபைக் கூட்டம் முன்னைய சந்தர்ப்பங்களில் எப்படி கூட்டப்பட்டது?

பதில்:- ஜே.ஆர்.ஜயவர்தனவின் காலத்தில் சில சந்தர்ப்பங்களில் நான் கலந்துகொண்டிருந்தேன். 87ஆம் ஆண்டின் பின்னர் ஒவ்வொரு வாரமும் பாதுகாப்புச் சபை கூடியது. பிரேமதாச, விஜயதுங்க மற்றும் சந்திரிகா குமாரதுங்க ஆகியோர் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் பெரும்பாலும் ஒவ்வொரு வாரமும் பாதுகாப்புச் சபை கூடியது. எனினும், யுத்தம் முடிவடைந்த பின்னர் நிலைமைகள் மாறியிருந்தன. வராவாரம் கூடவேண்டிய தேவை இருந்ததா? என்பது பற்றி எனக்குத் தெரியவில்லை. ஜனாதிபதி இல்லாத நேரத்தில் பிரதமரின் கீழ் தேசிய பாதுகாப்புச் சபை கூட்டப்பட்டுள்ளது. அக்காலத்தில் தேசிய பாதுகாப்புச் சபை மற்றும் இணைந்த நடவடிக்கை குழு என இரண்டு சபைகள் இருந்தன. சந்திரிகா குமாரதுங்கவின் காலத்தில் ஒரு பிரிவு இருந்தது.

ஜயம்பதி விக்ரமரட்ண :- குண்டுத் தாக்குதலின் பின்னர் நீங்கள் பாதுகாப்புச் சபையைக் கூட்டியிருந்தீர்கள் அதுபற்றி கூறுங்கள்?

பதில்:- அலரிமாளிகைக்கு வருமாறு நான் அவர்களைக் கேட்டுக்கொண்டிருந்தேன். அவர்கள் அங்கு வருவதில் காலதாமதம் இருப்பதை உணர்ந்தமையால் நான் நேரடியாகப் பாதுகாப்பு அமைச்சுக்குச் சென்று பாதுகாப்புச் சபையைக் கூட்டுவதற்குத் தீர்மானித்தேன். கடந்த காலங்களிலும் எனக்கு அவ்வாறான அனுபவம் உண்டு.

ஏம்.ஏ.சுமந்திரன் கேள்வி:- பாதுகாப்புச் சபைக் கூட்டம் அடுத்து எப்போ கூட்டப்படும் என்பது உங்களுக்கு அறிவிக்கப்படுமா?

பதில்:- பாதுகாப்பு அமைச்சு அல்லது ஜனாதிபதி செயலகம் அடுத்த பாதுகாப்புச் சபைக் கூட்டம் எப்போது என்பது பற்றி எமக்கு அறிவிக்கும். ஒவ்வொரு மாதத்துக்கு ஒருதடவை நடத்தப்பட்டதாகவே எனக்கு நினைவு உள்ளது.

ஏம்.ஏ.சுமந்திரன் கேள்வி :- தேசிய பாதுகாப்புச் சபை நடைபெற்றதாக பெப்ரவரி மாதம் நடைபெற்றதாக அறிந்ததாக கூறினீர்கள்?

பதில்: நான் பொலிஸ் மாஅதிபரிடம் கேட்டேன். தானும் அழைக்கப்படவில்லையென அவர் கூறியதுடன், பாதுகாப்புச் சபை இரத்துச் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.

எம்.ஏ.சுமந்திரன் கேள்வி:- இந்த நிலைமை 2018 ஒக்டோபர் மாதத்தின் பின்னர் ஏற்பட்ட நிலைமையாகும். பிரதமர் தேசிய பாதுகாப்புச் சபைக்கு அழைக்கப்படவில்லை என்பதை யாரிடமாவது கேட்டீர்களா?

பதில்: பாதுகாப்புச் சபை இரத்துச் செய்யப்பட்டுள்ளது என்றே நான் நினைத்திருந்தேன், பாகாப்புச் செயலாளரிடம் கேட்டபோதும் அவரும் அவ்வாறே கூறியிருந்தார்.

எம்.ஏ.சுமந்திரன் கேள்வி:- தேசிய பாதுகாப்புச் சபை மீண்டும் கூட்டப்படாது என அறிந்துகொண்டபோது, இது பற்றி ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவது பற்றியோ மக்களுக்குத் தெரியப்படுத்துவது பற்றியோ நீங்கள் யோசிக்கவில்லையா?

பதில்:- ஐ.எஸ்.ஐ.எஸ் பற்றி தகவல்கள் இருக்கவில்லை. போதைப்பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டிருந்தது. நான் ஜனாதிபதியிடம் கேட்கவில்லை. எனினும், சட்டம், ஒழுங்கு என தனியான அமைச்சு இருக்கவேண்டும் அதுவே வினைத்திறனான செயற்பாடாக இருக்கும் எனக் கருதியிருந்தேன். ஜனாதிபதியை படுகொலை செய்வதற்கான சதித்திட்டம் தீட்டப்பட்ட விடயம் குறித்த விசாரணை முடிவடைந்த பின்னர் சட்டம், ஒழுங்கு அமைச்சு வழங்கப்படும் எனக் கூறியிருந்தார். இது தனிப்பட்ட விடயமாக இருக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.

எம்.ஏ.சுமந்திரன் கேள்வி:- 2014ஆம் ஆண்டிலிருந்து இது தொடர்பில் தகவல்கள் உள்ளன. 2015ஆம் ஆண்டிலிருந்து அடிப்படைவாதம் வளர்ச்சியடைவதாக தகவல்கள் இருந்துள்ளன. அவ்வாறான சூழ்நிலையிலேயே நீங்கள் பிரதமராகப் பதவியேற்றிருந்தீர்கள். சட்டம் அமைச்சர்களிடமிருந்து அறிக்கைகள் பெற்றிருந்ததாகவும் கூறியிருந்தீர்கள். இது சரியா?

பதில்:- 2014ஆம் ஆண்டிலும் அறிக்கையிடப்பட்டிருந்தது. 2016ஆம் ஆண்டிலிருந்து நிலைமை மாற்றமடைந்திருந்தது. பாதுகாப்பு கோணத்தைவிட அரசியல் கோணத்திலிருந்தும் இது பார்க்கப்பட்டது.

எம்.ஏ.சுமந்திரன் கேள்வி:- காத்தான்குடியில் சட்டம், ஒழுங்கு கடைப்பிடிக்கப்படுவதில்லை போன்ற பிரச்சினைகள் இருந்தன. இதுபற்றி உங்களுக்குத் தெரியப்படுத்தப்பட்டிருந்ததா?

பதில்: சட்டம், ஒழுங்கு கடைப்பிடிக்கப்படுவது இல்லையென எனக்குத் தகவல்கள் கிடைத்திருக்கவில்லை. பயங்கரவாத செயற்பாடுகள் பற்றியோ ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புத் தொடர்புகள் பற்றியோ கிடைக்கவில்லை.

எம்.ஏ.சுமந்திரன் கேள்வி:- அடிப்படைவாதத்தை அரசியல் ரீதியாகத் தோற்கடிப்பது பற்றி கலந்துரையாடியிருந்தீர்களா?

பதில்: எமது பங்காளிக் கட்சிகள், சுயாதீன நபர்களுடன் இதுபற்றிக் கலந்துரையாடிருந்தேன். பயங்கரவாதம் இல்லையெனின் அடிப்படைவாதம் அரசியல் ரீதியாக தோற்கடிக்கப்பட வேண்டும் என எண்ணியிருந்தேன். எதிர் அரசியல் நடவடிக்கைகளாலேயே அடிப்படைவாதம் தோற்கடிக்கப்பட வேண்டும் என பாதுகாப்பு அமைச்சும் ஆலோசனை வழங்கியிருந்தது.

எம்.ஏ.சுமந்திரன் கேள்வி:- உங்கள் பாதுகாப்பு பிரிவுக்குக் கூட அறிவிக்கப்படவில்லையெனக் கூறப்பட்டது. எனினும் சில அமைச்சுக்களின் பாதுகாப்புப் பிரிவினருக்குத் தெரியப்படுத்தப்பட்டிருந்ததாகக் கூறியதா?

பதில்:- அவர்களுக்கு ஒருபோதும் இவ்வாறான தகவல்கள் கிடைத்திருக்கவில்லை. ஏனெனில் நான் விடுமுறைக்காக நுவரெலியா சென்றிருந்தேன். அங்கு நான் சுதந்திரமாக நடமாடியிருந்தேன். அச்சுறுத்தல் பற்றிய தகவல் கிடைத்திருந்தால் எனக்கு எச்சரித்திருப்பார்கள். எனது பாதுகாப்புப் பிரிவுக்கு அறிவிக்கவில்லையென்பதை பொலிஸ் மாஅதிபரும் பின்னர் ஏற்றுக்கொண்டிருந்தார்.

 

(மிகுதி சாட்சியம் நாளை)

Wed, 08/07/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை