எந்த சூழ்நிலைக்கும் முகம்கொடுக்கும் வகையில் இராணுவ புலனாய்வு பிரிவு மறுசீரமைக்கப்படும்

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஏற்படக்கூடிய நிலைமைகளுக்கும் முகம் கொடுக்கும் வகையில் இராணுவ புலனாய்பு பிரிவு மறுசீர மைக்கப்பட்டு அதன் செயற்பாடுகள் மேலும் சிறப்பாக முன்னெடுக்க தேவையான உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுமென புதிய இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.  

இந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் போது சர்வதேச ரீதியில் இராணுவம் பயன்படுத்தும் முறைமைகளை ஆராய்ந்து அதன் அனுபவங்களை எமது இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு பெற்றுக் கொடுப்பது தொடர்பில் தான் கூடுதல் கவனம் செலுத்தவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.  

இலங்கையின் 23ஆவது இராணுவத் தளபதியாக கடந்த 19ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா நேற்று முன்தினம் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். இதன் பின்னர் முதற்தடவையாக தனது கையொப்பமிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்துள்ளார்.  

இராணுவத் தளபதி மேலும் குறிப்பிடுகையில், எமது நாட்டின் இறைமை, ஆட்புல ஒருமைப்பாட்டை தொடர்ந்தும் பாதுகாப்பதற்காக இராணுவத்திற்கு தேவையான தலைமைத்துவத்தை வழங்க வேண்டியது இராணுவத் தளபதி என்ற வகையில் எனது பிரதான பொறுப்பாகும். அத்துடன் முழு நாட்டிலுள்ள மக்களின் பாதுகாப்பை உறுதிபடுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு பாதுகாப்புத்துறை சார்ந்த ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்க வேண்டியது எனது இரண்டாவது பொறுப்பாக நான் கருதுகின்றேன். அந்த அடிப்படையில் நாட்டின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கப்படும்.   திட்டமிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் உட்பட அனைத்தையும் முன்னெடுக்கும் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு தேவையான நலன்புரி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியது எனது மூன்றாவது பிரதான கடமையாகும் என்றும் தெரிவித்துள்ளார்.  

இலங்கை இராணுவம் உலகின் சிறந்த இராணுவம் என்று பெற்றுக்கொண்டுள்ள நற்பெயர் மற்றும் நம்பிக்கையை தொடர்ந்தும் தக்கவைத்துக் கொள்வது எமது அனைவரினதும் பாரிய பொறுப்பாகும். இந்நிலையில் நவீன தொழில்நுட்ப அறிவை படைவீரர்களுக்கு எதிர் காலத்தில் எந்தவொரு சவாலுக்கும் முகம்கொடும் வகையிலான பயிற்சிகளை  வழங்குவதே எனது எதிர்கால எதிர்பார்ப்பாகும்.

ஸாதிக் ஷிஹான்    

Sat, 08/24/2019 - 09:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை