தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் ஹமில்டன் வணசிங்கவின் பணி மகத்தானது

நாட்டில் ஒற்றுமையை ஏற்படுத்த மட்டுமல்லாமல் நாட்டின் தேசிய பாதுகாப்பையும் உறுதிப்படுத்த முன்னாள் இராணுவத் தளபதி ஹமில்டன் வணசிங்க ஆற்றிய பங்களிப்பை இலகுவில் கூறி முடிக்க முடியாது. அதனால் இப்பாதைக்கு அவரின் பெயரை சூட்டுவதில் தாம் மகிழ்ச்சியடைவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்த்தன தெரிவித்தார்.

அரசாங்கத்தால் சுமார் 150 இலட்சம் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யப்பட்ட மள்வானை தொம்பே வீதிக்கு 'ஜெனரல் ஹமில்டன் வணசிங்க மாவத்தை' என்ற பெயரை சூட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாட்டும் போதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

வீதிக்கு பெயர் சூட்டும் நிகழ்வு சனிக்கிழமை (24) மாலை இடம்பெற்றது.

இந் நிகழ்வில் புதிய இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா கலந்து கொண்டதோடு வீதியின் புதிய பெயர் பலகையை புதிய இராணுவ தளபதி திறந்து வைத்தார்.

இராஜாங்க அமைச்சர் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது;

இவ் வீதி நீண்ட காலமாக பழுதடைந்திருந்தமை யாரும் அறிந்ததே.இதனை புனரமைக்க ஹர்ஷன ராஜகருணா முன் வந்தார். அதற்காகவும் இதற்காக நிதி வழங்கிய பிரதமருக்கும் நான் நன்றி கூறுகிறேன்.இவ் வீதியை புனரமைக்க தொம்பே மக்களுக்கு தேவை இருந்தது போல் மள்வானை மக்களுக்கும் தேவை இருந்தது. அது தற்போது நிறைவேறியுள்ளது.

முன்னாள் இராணுவ தளபதி ஹமில்டன் வணசிங்க உன்னத சேவையாற்றியுள்ளார்.அவர் நாட்டுப்பற்றுள்ள எதற்கும் தயங்காத இராணுவ வீரர் படிப்படியாக முன்னேறி கட்டளைத் தளபதியாக, இராணுவ தளபதியாக உயர்வடைந்தார்.அவர் நாட்டுக்கு செய்த சேவை தொடர்பாக இந் நாட்டு மக்கள் பெருமிதமடைகின்றனர்.

இந் நாட்டில் கொடூர பயங்கரவாத யுத்தம் நிலவிய காலத்தில் வனசிங்க தனது புத்திசாலிதனத்தினாலும் திறமையினாலும் கிழக்கு மாகாணத்தை முழுமையாக பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து மீட்டார்.அதனால்தான் அங்கு அரசாங்கத்துக்கு தேர்தல் நடாத்த முடிந்தது.

ஆனையிறவு மற்றும் யாழ்ப்பாண கோட்டையை பயங்கரவாதிகள் சுற்றி வளைத்து இராணுவத்தோடு போரில் ஈடுபட்டபோது கொழும்பில் இருந்து கொண்டு கட்டளையிடாமல் நேரடியாக போர் முனைக்குச் சென்று இராணுவ வீரர்களை உட்சாகப்படுத்தியதோடு நாட்டையும் காப்பாற்றினார் என்றார்.

 

மள்வானை விசேட நிருபர்

Tue, 08/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை