பல்லின சமூகங்கள் வாழும் நாட்டில், பிற கலாசாரங்களை புரிந்து வாழ்வதே புத்திசாலித்தனம்

பல்லின சமூகம் வாழும் எமது நாட்டில் முஸ்லிம் சமூகம் நிதானமாவும் புத்திசாலித்தனமாகவும் நடந்து கொள்ள வேண்டுமென அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நசீர் தெரிவித்தார்.

கம்பரெலிய திட்டத்தின் கீழ் பாலமுனை சஹ்வா இஸ்லாமியா கல்லூரியில் ஒரு மில்லியன் ரூபா நிதியில் புனரமைப்புச் செய்யப்பட்ட மாணவர்களுக்கான கலாசார நிலைய திறப்பு விழா சனிக்கிழமை (03) கல்லூரியின் பணிப்பாளர் சபை தலைவர் மௌலவி இத்ரீஸ் ஹஸன் (ஸஹ்வி) தலைமையில் நடைபெற்றது. இந்நிகழவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது:

எமது நாட்டில் பல்லின சமூகங்கள் பின்னிப் பிணைந்து வாழுகின்றன. இவ்வாறான சூழலில் நிதானமாகவும் புத்திசாலித்தனமாகவும் நாம் வாழப்பழகிக் கொள்ள வேண்டும். இதற்கான வழிகாட்டல்கள், தலைமைத்துவங்களை உலமாக்கள் எமது சமூகத்திற்கு வழங்குவது காலத்தின் தேவையாகும். இஸ்லாம் பற்றிய பிற மதத்தவர்களின் தவறான புரிதல்களும், இஸ்லாமியர் நடந்து கொள்ளும் முறைகளுமே, எமது நாட்டில் சில பிரச்சினைகளைத் தோற்றுவிக்கின்றன. எமது சமூகத்தின் நிதானமிழந்த போக்கு பல தாக்கங்களை ஏற்படுத்திவிடுமோ என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

முஸ்லிம் சமூகத்திற்கெதிரான சில வெளிநாட்டு சக்திகளும் ஒருசில அரசியல் தலைமைகளுமே முஸ்லிம்களை ஏனைய சமூகத்தவர்களுடன் மோத வைக்கின்றன. இதற்கு எமது நாட்டிலுள்ள ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகமும் சோரம் போகவில்லை. அடிப்படைவாத த்தையோ, சமூகங்களுடன் முரண்படுவதையோ முஸ்லிம்கள் விரும்பவில்லை. இஸ்லாம் மார்க்கம் சாந்தி சமாதானத்தையே விரும்புகின்றது. இஸ்லாத்தின் பெயரால் புதிது புதிதாகப் புகுத்தப்படும் கொள்கைகள் சில விஷமிகள் திட்டமிட்டு வடிவமைக்கப்படுகின்றன.

இவற்றில் முஸ்லிம்கள் தெளிவாக இருந்து கொள்ள வேண்டும் என்றார்.

(பாலமுனை கிழக்கு தினகரன்.

ஒலுவில் கிழக்கு தினகரன் நிருபர்கள்)

Mon, 08/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை