குழந்தைகளை முத்தமிட்டு ஆதரவாளர்களுக்கு கையசைத்து ஏமாற்றிய காலம் மலையேறிவிட்டது

குழந்தைகளுக்கு முத்தமிட்டும் ஆதரவாளர்களுக்கு கையசைத்து ஏமாற்றி ஆட்சி செய்த காலம் மலையேறிவிட்டது. ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் பொருத்தமான தகுதியான வேட்பாளரை இனம்கண்டுள்ளோம். இந்த அறிவிப்பு பொருத்தமான தருணத்தில் வெளியிடப்படும் என நீதி மற்றும் சிறைச்சாலைகள் புனரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்தார்.

பலாங்கொடை பிரதேசத்தில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தகவல் தருகையில் கடந்த காலத்தில் பல்வேறு வழிகளில் மக்களை ஏமாற்றித் தமது குடும்ப ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கான ஆட்சி நிகழ்ந்தது. ஆட்சித் தலைவர் குழந்தைகளுக்கு முத்தமிட்டார். ஆதரவாளர்களுக்கு கையசைத்தார். ஆனால், இந்த ஆட்சிக் காலத்தில் நாட்டின் எதிர்கால நலனுக்கான குறிப்பிடத்தக்க எந்த முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை. தற்போதைய சூழ்நிலையில் எதிர்காலத்தில் திட்டமிட்டு சகல துறைகளையும் வலுப்படுத்தக் கூடிய ஒரு தலைமையே தேவைப்படுகிறது. இந்நிலைமையில் எதிர்கால ஜனாதிபதி தேர்தலுக்கு ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் பொருத்தமான தகுதியான வேட்பாளரை கண்டுள்ளோம். இந்த அறிவிப்பு பொருத்தமான தருணத்தில் வெளியிடப்படும். ஏழைகளின் வியர்வை துளிகளின் வாசம் அறிந்த மண்ணோடு போராடும் மக்களின் கஷ்டங்களை உணர்ந்த ஒரு மண்ணின் மைந்தனே எமக்குத் தேவை அவரை நாங்கள் இனங்கண்டுள்ளோம்.

இன்றைய சூழ்நிலையில் பல ஊடகங்கள் பிரதமருக்கும், அரசாங்கத்துக்கும் எதிராக திட்டமிட்ட பொய்களை வதந்திகளைப் பரப்பி வருகின்றன. நாங்கள் அவர்களை பழிவாங்கவோ, அடிக்கவோ, துன்புறுத்தவோ, தீவைக்கவோ மாட்டோம். எமது பொறுப்புக்களை மக்களுக்காக நேர்மையாக நிறைவேற்றுவதே எமது கடமையாகும்.

Sat, 08/17/2019 - 09:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை