பயங்கரவாதி ஆசாத்தின் உடற்பாகத்தை தோண்டியெடுக்க மட்டக்களப்பு மஜிஸ்திரேட் நீதிமன்று உத்தரவு

மட்டக்களப்பு இந்து மயானத்தில் புதைக்கப்பட்ட பயங்கரவாதி ஆசாத்தின்  உடற் பாகத்தை எதிர்வரும் திங்கட்கிழமை தோண்டி எடுக்குமாறு மட்டக்களப்பு மஜிஸ்திரேட் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.  

இந்த உடற்பாகத்தை மீண்டும் புதைப்பதற்கு தகுதியான இடமொன்றை மாவட்ட செயலாளர் இனங்கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தின் மீது தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்திய காத்தான்குடி பயங்கரவாதி ஆசாத்தின் தலைப்பாகம் கடந்த சில தினங்களுக்கு முன் மட்டக்களப்பு கல்லியங்காடு இந்து மயானத்தில் புதைக்கப்பட்டது. இதற்கு  பெரும் எதிர்ப்பு உருவாகியிருந்தது.   எனவே இது தொடர்பாக குற்றப் புலனாய்வு திணைக்களம் நேற்று (30) மட்டக்களப்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திடம் விளக்கமளித்தது.

இதனையடுத்தே மட்டக்களப்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் மாவட்ட அரச அதிபருக்கு இவ்வாறு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.   நீதிமன்றம் வழங்கிய இந்த உத்தரவின்படி திங்களன்று தலைப்பாகம் தோண்டி எடுக்கப்பட்டதன் பின்னர் தகுதியான ஒரு இடத்தை மட்டு. மாவட்ட அரச அதிபர் அடையாளம் காணும் வரை பொலிஸ் பாதுகாப்புடன் மட்டக்களப்பு ஆஸ்பத்திரியின் பிரேத அறையில் வைத்திருக்க வேண்டுமெனவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்தார். 

Sat, 08/31/2019 - 08:43


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை