அகிலவின் பந்துவீச்சு முறையற்றது

ஐசிசி குற்றச்சாட்டு

இலங்கை அணியின் சுழல் பந்துவீச்சாளர் அகில தனஞ்சய ஐசிசியின் விதிமுறையை மீறி பந்துவீசுவதாக சர்வதேச கிரிக்கெட் சபை மீண்டும் குற்றம்சாட்டியுள்ளது.

காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் போது, ஐசிசியின் விதிமுறையை மீறி அகில தனஞ்சய பந்துவீசினார் என போட்டி மத்தியஸ்தரிடம் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

போட்டி அதிகாரிகள் அகில தனஞ்சயவின் பந்துவீச்சு குறித்து இலங்கை அணி முகாமைத்துவதுடன் கலந்துரையாடியுள்ளதாக ஐசிசி தகவல் வெளியிட்டுள்ளது.

அதன்படி, அகில தனஞ்சய கடந்த 18ம் திகதியிலிருந்து எதிர்வரும் 14 நாட்களுக்குள் பந்துவீச்சு பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என ஐசிசி சுட்டிக்காட்டியுள்ளதுடன், அதுவரையில், அவரால் சர்வதேச போட்டிகளில் பந்துவீச முடியும் என ஐசிசி தெரிவித்துள்ளது

இந்த அறிவித்தலின் படி, நாளை (22) நடைபெறவுள்ள நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அகில தனஞ்சயவால் விளையாட முடியும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அகில தனஞ்சய 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது, ஐசிசி விதிமுறையை மீறி பந்துவீசுவதாக குற்றம் சுமத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து நவம்பர் மாதம் 23ம் திகதி பிரிஸ்பேனில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது, அகில தனஞ்சய விதிமுறையை மீறி பந்துவீசுவது உறுதிசெய்யப்பட்டது.

இதன் பின்னர் அகில தனஞ்சய அவருடைய பந்துவீச்சு முறைமையை மாற்றியமைத்துக்கொண்டு, கடந்த பெப்ரவரி மாதம் இந்தியாவின் சென்னையில் வைத்து பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டார். இந்த பரிசோதனையின் மூலம், கடந்த பெப்ரவரி 18ம் திகதி சர்வதேச போட்டிகளில் பந்துவீசுவதற்கு அகில தனஞ்சய மீண்டும் அனுமதிக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, உள்ளூர் போட்டிகளில் விளையாடிய இவர், தென்னாபிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்ற மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் பங்கேற்றார்.

குறித்த தொடரில் சிறப்பாக செயற்பட தவறியதால் அகில தனஞ்சய உலகக் கிண்ண அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

எவ்வாறாயினும், அதன் பின்னர், நடைபெற்ற இந்திய ஏ அணிக்கு எதிரான தொடர் மற்றும் பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடர்களில் சிறப்பாக செயற்பட்ட இவர், தடைக்கு பின்னர் முதன்முறையாக நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் அணிக்குள் அழைக்கப்பட்டார். இந்த தொடரின் முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய இவர், இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டினை கைப்பற்றியிருந்தார். தடைக்கு பின்னர் அவர் விளையாடிய முதல் போட்டியிலேயே ஐசிசி அவரது பந்துவீச்சானது விதிமுறைக்கு மாறானது என குற்றம் சுமத்தியுள்ளது.

இதேவேளை, இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பந்துவீசிய நியூசிலாந்து தலைவர் கேன் வில்லியம்சனும், ஐசிசி விதிமுறையை மீறி பந்துவீசுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், துடுப்பாட்ட வீரராக செயற்படும் அவருக்கு, இந்த குற்றச்சாட்டானது பாரிய இழப்பாக அமையாது என எதிர்பார்க்கப்படுகிறது. இவரும் எதிர்வரும் 14 நாட்களுக்குள் பந்துவீச்சினை பரிசோதனைக்கு உள்ளாக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Wed, 08/21/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை