மஹிந்தவின் எதிர்க்கட்சித் தலைவர் பதவி பறிபோனாலும் கவலையில்லை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைப் பொறுப்பை ஏற்பதால் மஹிந்த ராஜபக்ஷவின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியோ அல்லது எம்.பி. பதவியோ பறிபோகுமானால் அதைப்பற்றி கவலைப்பட மாட்டோம். மஹிந்த மக்கள் தலைவர். எப்போதும் மக்கள் மனதில் உள்ளார் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

கோட்டாபய ராஜபக்ஷ ஒரு பயங்கரமான மனிதர் அல்ல. அவர் ஒரு சர்வாதிகாரியாக இருப்பாரென யாரும் அவரைக்கண்டு

அஞ்ச வேண்டாம். கோட்டாபய ராஜபக்ஷ தமது அமெரிக்க குடியுரிமையை நீக்கிக்கொண்டுள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட எனக்கு அதிர்ஷ்டம் இல்லை என்றும் அவர் கூறினார்.

கொழும்பு, கிங்ஸ்பரி ஹோட்டலில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

எதிர்வரும் 11ஆம் திகதி நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் மாநாட்டுக்கு வருமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் சேர்ந்தால் வெற்றிபெறுவோம் என்றும் இல்லை தோல்வியடைவோம் என்றும் இல்லை. ஆனால், எல்லாக் கட்சிகளையும் இணைத்துப் போட்டியிட வேண்டும். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை 11ஆம் திகதி நடைபெறவுள்ள கட்சியின் மாநாட்டில் மஹிந்த ராஜபக்ஷ அறிவிப்பார்.

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசு ஒன்றை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அவரின் வழிகாட்டலின் கீழ் ஆட்சி முன்னெடுக்கப்படும். வடக்கு, கிழக்கில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும்பான்மையான மக்கள் ஆதரவைப் பெறவில்லை. இந்தநிலையில், வடக்கு, கிழக்கு, மலையகம் எனப் பல கட்சிகள் எங்களுடன் உள்ளன. அவர்களுடன் இணைந்து பேசி ஆட்சியை அமைப்போம்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைமைப் பொறுப்பை ஏற்பதால் மஹிந்தவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியோ அல்லது எம்.பி. பதவியோ இல்லாமல் போகுமானால் அதைப்பற்றி எமக்குக் கவலையில்லை. மஹிந்த எப்போதும் மக்கள் மனதில் உள்ளார். அவர் மக்கள் தலைவர்.

சர்வதேச ரீதியாக நாங்கள் கடந்த காலங்களில் விட்ட தவறுகளை மீண்டும் செய்யமாட்டோம். உலக நாடுகள் பலவற்றுடன் இராஜதந்திர ரீதியில் நெருங்கிச் செயற்படுகின்றோம்.

தோட்ட மக்களின் பிரச்சினைகள் கவனிக்கப்பட வேண்டும்.

அவர்களின் பிரச்சினைகள் பலவற்றை கடந்த ஆட்சியில் நாங்கள் தீர்த்தோம். தபால் விநியோகம் , மின் விநியோகம் , உட்கட்டமைப்பு வசதிகள் செய்தோம். காணிப் பிரச்சினை ஒன்று இருந்தது. தொழிலாளர்கள் சம்பள விடயத்தில் நாங்கள் முழுக் கவனம் செலுத்துவோம் என்றார்.

 சுப்பிரமணியம் நிஷாந்தன்

 

Fri, 08/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை