சினேகபூர்வ கிரிக்கெட் போட்டி; யாழ். மத்திய கல்லூரி வெற்றி

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, கொழும்பு வெஸ்லி கல்லூரி அணிகளுக்கிடையில் வருடா வருடம் இடம்பெறவுள்ள இரண்டு நாள் போட்டியின், ஆரம்ப போட்டி கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
இதில் பலம் வாய்ந்த வெஸ்லி கல்லூரி அணியினை, மத்திய கல்லூரி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை இளையோர் தேசிய அணி வீரரும், மத்திய கல்லூரி அணியின் பருவ காலத்திற்கான தலைவருமான வியாஸ்காந்த் முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தார். துடுப்பெடுத்தாட களமிறங்கிய மத்திய கல்லூரி அணியினர் ஓட்டம் ஏதும் பெறாத நிலையிலேயே முதலாவது விக்கெட்டினை இழந்தனர். இரண்டாவது விக்கெட்டிற்காக களமிறங்கிய சன்சஜன், இயலரசன் ஜோடி அரைச்சத இணைபாட்டமொன்றினை பெற்றிருந்த நிலையில், இயலரசன் 32 , சன்சஜன் 41 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து களமிறங்கிய கஜன் அதிரடியாக துடுப்பெடுத்தாடி 17 பௌண்டரிகள் 3 சிக்ஸர்கள் உள்ளடங்கலாக 118 பந்துகளில் 102 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்து ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்திருந்தார்.
கஜனின் சத்தத்தின் உதவியுடன் மத்திய கல்லூரி அணி தமது முதலாவது இன்னிங்சிற்காக 84 ஓவர்களில் 286 ஓட்டங்களைப் பெற்று கொண்டது.
வெஸ்லி கல்லூரி சார்பில் பந்து வீச்சில் செமில 75 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தார்.
தமது முதலாவது இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாட ஆரம்பித்திருந்த வெஸ்லி கல்லூரியின் முதல் 5 விக்கெட்டுக்களையும் குறைந்த ஓட்டங்களுக்குள் இழந்த்து. இயலரசன் அவற்றுள் 4 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
வெஸ்லி கல்லூரி அணியினர் 40.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 96 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டனர். அதிகபட்சமாக பின்வரிசை வீரர் ஆகிப் 33 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
முதலாவது இன்னிங்சில் 190 ஓட்டங்களால் முன்னிலை பெற்ற மத்திய கல்லூரியினர், வெஸ்லி கல்லூரியை இரண்டாவது இன்னிங்சுக்காகவும் தொடர்ந்து துடுப்பெடுத்தாடுமாறு பணித்தனர்.
இரண்டாவது இன்னிங்ஸிலும் மோசமான துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்திய வெஸ்லி கல்லூரியினர் 71 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தனர். அதிகபட்சமாக அனுடித் 24 ஓட்டங்களினை பெற்றுக்கொடுத்திருந்தார்.
பந்துவீச்சில் வியாஸ்கந்த் 4 விக்கெட்டுக்களையும், கவிதர்சன் 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர். இதனால் யாழ்மத்திய கல்லூரி அணியினர் ஒரு இனிங்ஸ் மற்றும் 119 ஓட்டங்களாலும் வெற்றிபெற்றனர்.
போட்டி விவரம்
யாழ் மத்திய கல்லூரி (முதலாவது இன்னிங்ஸ்) – 286 (84) – கஜன் 102, சன்சஜன் 41, செமில 5/75, ராகுல் 3/63
வெஸ்லி கல்லூரி (முதலாவது இன்னிங்ஸ்) – 96 (40.1) – ஆகிப் 33, இயலரசன் 4/20, வியாஸ்கந்த் 2/24, விதுஷன் 2/25
வெஸ்லி கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 71 – வியாஸ்கந்த் 4/30, கவிதர்சன் 3/3

(நல்லூர் விசேட நிருபர்)

Thu, 08/22/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை