ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எவரையும் சந்திக்கத் தயாரில்லை

லோரன்ஸ் செல்வநாயகம்

உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில் சுயாதீன ஆணைக்குழுவொன்றை நியமித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி பெற்றுக் கொடுக்கப்படும்வரை, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எந்த வேட்பாளர்களையும் சந்திக்கத் தயாரில்லை என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

அனைவராலும் ஏற்றுக்கொள்ளும் பாரபட்சமற்ற நேர்மையான ஆணைக்குழுவொன்றை நியமித்து மேற்படி தாக்குதல் தொடர்பில் முழுமையான உண்மையான தகவல்களை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

மேற்படி ஆணைக்குழுவை நியமிக்கும் போது ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் ஏனைய கட்சிகளின் தலைவர்கள் இணைந்து செயற்பட வேண்டும். அவர்களுடைய ஒருமித்த தீர்மானத்திற்கிணங்கவே இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட வேண்டும். எவரதும் இலாபம் கருதியோ அல்லது தமது தரப்பை மட்டும் முன்னிறுத்தும் அறிக்கையையோ வெளியிடுவதை விடுத்து மக்களுக்கு உண்மை தகவல்கள் தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

கொழும்பு புஞ்சிபொரளையிலுள்ள பேராயர் இல்லத்தில் நேற்று (31) இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் விளக்கமளிக்கும்போதே பேராயர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் விளக்கமளித்த அவர், மேற்படி சம்பவம் தொடர்பில் இலாப நட்டம் பாராது மிக நேர்மையுடன் மக்களுக்கு உண்மையை தெளிவுபடுத்த விரைவான நடவடிக்கை எடுக்கவேண்டுமென தலைவர்களைக் கேட்டுக்கொள்கின்றேன்.

தலைவர்கள் முதுகெலும்புள்ளவர்களாக செயற்பட வேண்டுமென நான் ஒரு உரையில் குறிப்பிட்டது ஜனாதிபதிக்கோ அல்லது பிரமதருக்கோ அல்ல. ஜனாதிபதி அதனை தனக்கென நினைத்துக் கொண்டாராயின் அதற்கு நான் பொறுப்பில்லை.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று மூன்று மாதங்கள் நிறைவடைகின்றன. மேற்படி தாக்குதலில், தாய் இல்லாத பிள்ளைகள், தந்தை இல்லாத பிள்ளைகள், பிள்ளைகள் இல்லாத பெற்றோர்கள், முழுக் குடும்பங்களையுமே இழந்த உறவினர்கள். ஆகியோரின் கண்ணீர் கதைகளுக்கு செவிமடுத்தவனாக நான் இதைக் கேட்டுக் கொள்கின்றேன். அவர்களுக்கு விரைவாக நீதி கிடைக்க வேண்டும். “எமக்கு நட்டஈடோ பணமோ வேண்டாம் உண்மையில் நடந்தது என்ன என்பதை தெரிவியுங்கள்” என்றே அவர்கள் கண்ணீருடன் என்னிடம் கேட்கின்றனர்.

இதற்கிணங்க இந்தக் கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியிலுள்ளவர்கள் யார்? அதற்கான சூழ்ச்சியை மேற்கொண்டவர்கள் யார்? அதனை அமைப்பு ரீதியாக மேற்கொண்டவர்கள் யார்? அதற்கு அனுசரணை வழங்கியவர்கள் யார்? ஏற்கனவே கிடைத்த புலனாய்வு தகவல்களை வேண்டுமென்றே உதாசீனம் செய்தவர்கள் யார்? சந்தேகநபர்கள் என கைதுசெய்து விரிவான விசாரணை நடத்தாமல் அவர்களை விடுதலை செய்தது யார்? அவர்கள் எந்தவொரு தண்டனையுமின்றி தற்போது சுயாதீனமாக நடமாடுகின்றார்கள் என்பதே உண்மை. இந்த கொடூரமான தாக்குதல் இடம்பெற்றதற்கு முன்பதாகவும் அதன் பின்னரும் அதுதொடர்பில் நீதி நிலைநாட்டப்படவில்லை. உண்மையை மறைப்பதற்கு பெரும் பிரயத்தனம் மேற்கொள்ளப் படுவது மட்டும் எமக்குத் தெரிகிறது.

அரசாங்கம் மட்டுமன்றி எதிர்க்கட்சி மற்றும் அனைத்துக் கட்சிகளும் இதற்கு பொறுப்புக் கூறவேண்டும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஆளும் கட்சி எதிர்க்கட்சியென கூறிக் கொண்டிருக்க முடியாது. அதேபோன்று தமக்கு புள்ளிகளைப் போட்டுக்கொள்வதற்காக எவரும் செயற்படக்கூடாது. அனைவரும் இணைந்து செயற்பட வேண்டியது முக்கியம். என்றும் பேராயர் கேட்டுக்கொண்டார். (ஸ)

 

Thu, 08/01/2019 - 06:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை