நிலத்தை சுத்தப்படுத்துவற்காக தீ வைக்க பிரேசிலில் தடை

அமேசன் மழைக்காடுகளில் பெரும் எண்ணிக்கையான காட்டுத் தீ சம்பவங்கள் பதிவான நிலையில் நிலங்களை சுத்தப்படுத்துவதற்காக தீமூட்டுவதற்கு பிரேசிலில் 60 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மழைக்காட்டை பாதுகாக்கத் தவறியது குறித்து சர்வதேச அளவில் கடும் கண்டனங்களுக்கு முகம்கொடுத்திருக்கும் ஜனாதிபதி ஸெயீர் பொல்சொனாரோ இந்த ஆணையில் கையெழுத்திட்டுள்ளார்.

எனினும் இந்தத் தீ சம்பவங்களில் மோசமான நிலை இன்னும் தீரவில்லை என்று பிரேசிலின் முன்னணி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர். இந்தப் பிரச்சினை குறித்து தென் அமெரிக்க நாடுகள் அடுத்து வாரம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.

ஒட்சிசனை வெளியிடுவதில் பிரதான பங்கு வகிக்கும் அமேசன் உலக வெப்பமாதலை கட்டுப்படுத்துவதில் தீர்க்கமானதாகவும் உள்ளது. இங்கு 2018 இன் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் தீ சம்பவங்கள் 77 வீதமாக அதிகரித்திருப்பதோடு 80,000 க்கும் அதிகமான அவ்வாறான சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

பொல்சொனாரோ நிர்வாகத்தின் கொள்கைகளே இவ்வாறான தீ சம்பவங்கள் அதிகரிக்க காரணம் என்று சுற்றுச்சூழல் அர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதில் சில சம்பவங்களில் நிலத்தை சுத்தப்படுத்துவதற்கு சட்டவிரோதமாக தீ வைக்கப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது. இது குறுத்து விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இந்த நோக்கத்திற்காக தீ வைப்பது நாடு முழுவதும் தடை செய்யும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தாவரங்களின் சுகாதாரம் தொடர்பான சுற்றுச்சூழல் நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்டதும், காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் நோக்கிலும், பழங்குடி மக்களால் முன்னெடுக்கப்படும் பாரம்பரிய விவவசாய நடைமுறைகளுக்காகவும் மாத்திரமே தீ வைப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

காட்டை அழிப்பவர்கள் மரங்கள் மற்றும் தாவரங்களை வெட்டி அவரை பற்றி எரிய போதுமாக உலரும் வரை விட்டு வைத்தே தீமூட்டுவதாக இது தொடர்பாக கண்காணிப்பில் ஈடுபடும் அமைப்புகள் குறிப்பிடுகின்றன.

கடந்த ஏப்ரல், மே மற்றும் ஜுன் மாதங்களில் ஏற்பட்ட காடழிப்புகளின் விளைவாகவே தற்போதை தீ ஏற்பட்டிருப்பதாக கருதப்படுகிறது.

இந்நிலையில் தீயை அணைப்பதற்கு சிலி வழங்க முன் வந்த நான்கு விமாங்களை பிரேசில் அரசு ஏற்றுள்ளது. எனினும் அது ஜி7 நாடுகள் வழங்க முன்வந்த 22 மில்லியன் டொலர் நிதியை நிராகரித்துள்ளது. பிரான்ஸ் ஜனாதிபதி எம்மானுவேல் மெக்ரோன் மற்றும் பொல்சொனாரோவுக்கு இடையிலான முறுகலுக்கு மத்தியிலேயே பிரேசில் இந்த முடிவை எடுத்தது.

தீயை அணைப்பதற்கு 7 மாநிலங்களில் 44,000 துருப்புகள் போராடுவதாக பிரேசில் அரசு குறிப்பிட்டுள்ளது.

Fri, 08/30/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை