ஐ.தே.க வை விமர்சித்த இரு அமைச்சர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்ைக

ஐக்கிய தேசியக் கட்சியை விமர்சித்து ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்கள் இருவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டிருப்பதாக அக்கட்சியின் செயலாளர், அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அறிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி, அதன் தலைமைத்துவம், செயற்குழு, கட்சியின் செயற்பாடு என்பவற்றை விமர்சித்த அமைச்சர்களான

அஜித்.பி.பெரேரா மற்றும் சுஜீவ சேனசிங்க ஆகியோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவிருப்பதாக அக்கட்சியின் செயலாளர் தனித்தனியே எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

ஐ.தே.கவின் செயலாளர் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தினால் இந்தக் கடிதங்கள் நேற்றைய தினம் அவர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

இவர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் செப்டெம்பர் 9ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக விளக்கமளிக்க வேண்டும் என்றும், விளக்கமளிக்கப்பட்ட பின்னர் கட்சியின் ஒழுக்காற்றுக் குழு கூடி அவர்களுக்கு எதிரான எதிர்கால நடவடிக்கை குறித்து தீர்மானிக்கும் என்றும் செயலாளர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் மாற்றுக்கருத்துக்கள் நிலவிவரும் சூழ்நிலையில், அக்கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவை வேட்பாளராக்க வேண்டும் என வலியுறுத்தி பதுளை மற்றும் மாத்தறை மாவட்டங்களில் பொதுக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. இந்தக் கூட்டங்களில் அஜித்.பி.பெரேரா மற்றும் சுஜீவ சேனசிங்க ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

ஐக்கிய தேசியக் கட்சியில் சஜித் ஆதரவாளர்கள் அணியொன்று உருவாகியிருக்கும் நிலையில் அவர்கள் அனைவருக்கும் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க கட்சித் தலைமைத்துவம் தீர்மானித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நமது நிருபர்

Wed, 08/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை