எந்த ராஜபக்‌ஷவை நிறுத்தினாலும் அவரை தோற்கடிக்கும் வேட்பாளரை ஐ.தே.மு களமிறக்கும்

லங்கா பொதுஜன பெரமுனையின் ஜனாதிபதி வேட்பாளராக எந்த ராஜபக்‌ஷ நிறுத்தப்பட்டாலும் அவரைத் தோற்கடிக்கும் ஒருவரே ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என சுகாதார போசனை மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.

மத்துகம பிரதேசத்தில் புனரமைக்கப்பட்ட பாலமொன்றைத் திறந்து வைத்து உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

"குறிப்பிட்ட ஒரு சமூகத்தினால் விரும்பப்படும் ஒருவரை நாம் வேட்பாளராக நிறுத்தப்போவதில்லை. பாரிய வாக்கு வித்தியாசத்தில் நாடளாவிய ரீதியில் வெற்றிகொள்ளக் கூடிய ஒருவரையே களமிறக்குவோம்.

ஐக்கிய தேசியக் கட்சியே விவசாயிகள், தொழிலாளர்கள் என சகல தரப்பினரையும் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சியாகும்.

அவ்வாறான கட்சியிலிருந்து நிறுத்தப்படும் ஒருவரே ஜனாதிபதியாக முடியும். முன்னாள் ஜனாதிபதிகளான ஆர்.பிரேமதாச மற்றும் டி.பி.விஜயதுங்க ஆகியோர் இதற்கு சிறந்த உதாரணங்களாகும்" என்றார்.

பல்வேறு சவால்களுக்கு மத்தியில் கடந்த நான்கரை வருடங்களில் நாட்டை அபிவிருத்தி செய்ய முடிந்துள்ளது. இந்த அபிவிருத்தியை விரும்பும் மக்கள் எதிர்வரும் 10 வருடங்களுக்கு எமக்கே வாக்களிப்பார்கள்" எனவும் கூறினார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

2015ஆம் ஆண்டு நாம் வென்ற பின்னர் பசில் ராஜபக்‌ஷ நாட்டைவிட்டுச் சென்றிருந்ததுடன், மஹிந்த ராஜபக்‌ஷ கால்டன் இல்லத்துக்குச் சென்றுவிட்டார். அப்போது நாம் பொதுத் தேர்தலை நடத்தியிருக்க வேண்டும். எனினும் தொடர்ச்சியான வெற்றிகளுக்கு முன்னுரிமையளிக்காது நாட்டுக்கு முன்னுரிமையளித்தோம். இதனைப் பயன்படுத்தி நாம் அபிவிருத்திகளை மேற்கொண்டோம். எனினும், அரசாங்கத்தில் பதவிகளுக்கு இணைந்துகொண்ட சிலர் அரசாங்கத்துக்குள் இருந்துகொண்டே அரசை விமர்சித்தனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 180 பாகை திரும்பி சுதந்திரக் கட்சித் தலைமைப்பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இது அபிவிருத்தியை நோக்கிய எமது பயணத்துக்கான நிலைமையை மாற்றியது. இந்த மாற்றத்தினால் மோசடியாளர்களை கைதுசெய்து அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கமுடியாமல் போனது.

அவர் நல்லாட்சியின் கொள்கைகளைக் காட்டிக்கொடுத்துவிட்டார். லசந்த விக்ரமதுங்க, பிரகீத் எக்னலிகொட ஆகியோர் பற்றி விசாரணைகள் இழுத்தடிக்கப்பட்டன. ராஜபக்‌ஷ குடும்பத்தை சேர்ந்த ஒருவரையே தலைவராகக் கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அரசியல் சக்தியொன்று உள்ளது. அவர்களை முன்னிலைப்படுத்தியே அவர்களால் அரசியல் செய்யமுடியும் என்றும் அவர் மேலும் கூறினார்.

Mon, 08/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை