வர்த்தக சேவை மெய்வல்லுனர் போட்டிகள் இன்றும் நாளையும்

36 ஆவது வர்த்தக சேவை மெய்வல்லுனர் போட்டி இன்று மற்றும் நாளைய தினங்களில் சுகததாச விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது.

இந்த மெய்வல்லுனர் போட்டிக்கு ஸ்ரீலங்கா டெலிகொம் பிரதான அனுசரணையாளராக செயற்படுவதோடு லேக்ஹவுஸ், தேசிய ரூபவாஹினி கூட்டுத்தாபனம், கொழும்பு கப்பல் நிறுத்த நிறுவனம், பீப்பல்ஸ் லீசிங், டேவிட் பீரிஸ், ஆர்பிகோ சிலோன் பிஸ்கட் மற்றும் அலியன்ஸ் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அனுசரணை வழங்குகின்றன.

இதற்கு முன்னர் நடைபெற்ற போட்டிகள் மூன்று நாட்கள் வரை இடம்பெற்றபோதும் இம்முறை முதல் தடவையாக இரண்டு நாட்களுக்குள் அனைத்து போட்டிகளையும் நடத்தி முடிப்பதற்கு ஏற்பாட்டுக்கு குழுவினர் தீர்மானித்துள்ளனர். முதல் நாளில் மாத்திரம் காலை 8 தொடக்கம் இரவு 9 வரை போட்டிகளை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுகததாச அரங்கில் இவ்வாறு முதல் முறையாக இரவு வேளையில் போட்டிகளை நடத்துவதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதன் மூலம் வீர, வீராங்கனைகளுக்கு புது அனுபவத்தை பெற்றுக்கொடுப்பதற்கும் அவர்கள் இரவு போட்டிகளுக்கு பழகிக் கொள்வதற்கும் வாய்ப்பாக அமையும். இம்முறை போட்டிகளில் புதிய விளையாட்டாக கயிறிழுக்கும் போட்டி இணைக்கப்பட்டுள்ளது.

இதில் 275 போட்டிகளுக்காக 2500 க்கும் அதிகமான வீர, வீராங்கனைகள் பங்கேற்பதோடு மொத்தம் 52 நிறுவனங்கள் கலந்துகொள்கின்றன. மேலும் இந்தியாவில் இருந்து 27 பேர் கொண்ட குழு ஒன்றும் இம்முறை போட்டிகளில் பங்கேற்கின்றது.

இம்முறை போட்டிகளில் திறமையான வீரர்களுக்கு முக்கிய பரிசில்களை வழங்குவதற்கு தமது சபை நடவடிக்கை எடுத்திருப்பதாக இலங்கை வர்த்தக சேவை மெய்வல்லுனர் சபை தலைவர் பிரசன்ன இந்திக்க குறிப்பிட்டார்.

Sat, 08/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை