நிசங்கவின் அதிரடி சதத்தால் இலங்கை வளர்ந்து வரும் அணிக்கு தொடர் வெற்றி

பெத்தும் நிசங்கவின் அதிரடி சதத்தின் உதவியோடு பங்களாதேஷ் வளர்ந்து வரும் அணிக்கு எதிரான மூன்றாவதும் கடைசியுமான ஒருநாள் போட்டியில் இலங்கை வளர்ந்து வரும் அணி டக்வர்த் லுவிஸ் முறைப்படி 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

இதன்மூலம் சரித் அசலங்க தலைமையிலான இலங்கை வளர்ந்து வரும் அணி 2–1 என தொடரை கைப்பற்றியது.

பங்களாதேஷின் குல்னாவில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட பங்களாதேஷ் வளர்ந்து வரும் அணிக்காக ஆரம்ப வீரர் சைப் அல் இஸ்லாம் 117 ஓட்டங்களை பெற்றார். மத்திய வரிசையில் அபிப் ஹொசைன் 68 ஓட்டங்களை குவித்தார்.

இதன்மூலம் பங்களாதேஷ் 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 269 ஓட்டங்களை பெற்றது. இதன்போது இலங்கை வளர்ந்து வரும் அணி சார்பில் கலன பெரேரா 2 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

இந்நிலையில் இலங்கை வளர்ந்து வரும் அணி வெற்றி இலக்கை நோக்கி பதிலெடுத்தாட களமிறங்கியபோது மழை குறுக்கிட்டதால் வெற்றி இலக்கு 28 ஓவர்களில் 199 ஆக மாற்றப்பட்டது.

எனினும் ஆரம்பி வீரர் நிசங்க 78 பந்துகளில் 8 பெளண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காது 115 ஓட்டங்களை பெற்றதன் மூலம் இலங்கை வளர்ந்து வரும் அணி வெற்றி இலக்கை இலகுவாக எட்ட முடிந்தது.

இதன்படி இலங்கை அணி 24 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதன்போது மினோத் பானுக்க 55 ஓட்டங்களை பெற்றார்.

Mon, 08/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை