பாகிஸ்தானில் பாதுகாப்பு குறித்து இலங்கை கிரிக்கெட் சபை திருப்தி

பாகிஸ்தானில் உள்ள பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆராய்வதற்காக அங்கு சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் செயலாளர் மொஹான் டி சில்வா உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் பாகிஸ்தானில் சர்வதேசப் போட்டிகள் நடைபெறுவதற்கான சூழல் காணப்படுவதாக அந்நாட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளனர்.

ஏதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி கராச்சி சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ள இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டித் தொடரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆராய்வதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துடன் இணைந்து பாதுகாப்பு அதிகாரிகள் பாகிஸ்தானின் மத்திய பொலிஸ் அலுவலகத்திற்கு சென்று சிந்து மாநிலத்தின் பொலிஸ் மாஅதிபர் கலாநிதி கலீம் இமாமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.

ஐந்து பேர் கொண்ட இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள் குழுவிற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் செயலாளர் மொஹான் டி சில்வா தலைமை தாங்கினார்.

அதேபோன்று பாகிஸ்தான் கிரிக்கெட் சபையைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஐந்து பேர் கொண்ட குழுவும் இதில் கலந்துகொண்டதுடன், அந்நாட்டு கிரிக்கெட் சபையின் சர்வதேசப் போட்டிகளுக்கான பிரதான செயற்பாட்டு பணிப்பாளர் சாகிர் கானும் இதில் கலந்துகொண்டார்.

கடந்த காலங்களுடன் ஒப்பிடும்போது சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமை மேம்பட்டுள்ளதாக பாகிஸ்தானின் பிரதான பொலிஸ் அத்தியட்சகர் இலங்கை தரப்பினரிடம் தெரிவித்தார்.

எனவே, இலங்கை கிரிக்கெட் அணிக்கு விமான நிலையம் முதல் மைதானம் வரை சர்வதேச தரத்திலான முழுமையான பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் அவர் இதன்போது உறுதியளித்துள்ளார்.

இறுதியாக, பாகிஸ்தானின் ஒட்டுமொத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் செயலாளர் மொஹான் டி சில்வா தனது திருப்தியை தெரிவித்ததாக பொலிஸ் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

Sat, 08/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை