ஸ்டீவ் ஸ்மித் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆடுவது சந்தேகம்

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரரான ஸ்டீவ் ஸ்மித், ஆஷஸ் டெஸ்ட் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லண்டன்- லோட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கெதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியின் போது, ஜொப்ரா ஆர்ச்சரின் பௌன்சர் பந்து, ஸ்மித்தின் கழுத்து பகுதியை தாக்கியதில் அவருக்கு மூளையில் அதிர்வு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து இந்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

போட்டியின் நான்காவது நாளான கடந்த சனிக்கிழமை, ஆர்ச்சர் மணிக்கு 148.7 கிலோமீற்றர் வேகத்தில் வீசிய பௌன்சர் பந்து 80 ஓட்டங்களுடன் இருந்த ஸ்மித்தின் கழுத்து பகுதியை தாக்கியது.

இதனையடுத்து மயக்க கலக்கத்துடன் மருத்துவரின் உதவியுடன் ஓய்வறை திரும்பிய ஸ்மித், மீண்டும் களமிறங்கி மேலும் 12 ஓட்டங்களை பெற்ற நிலையில் எல்.பி.டபிள்யூ முறையில் கிறிஸ் வோக்ஸின் பந்துக்கு ஆட்டமிழந்தார்.இதன் தாக்கம் ஸ்மித்திற்கு நீடிக்க. போட்டியின் ஐந்தாவது நாளில் ஸ்மித் விளையாடவில்லை. அவருக்க பதிலாக மாற்று வீரர் களமிறக்கப்பட்டார்.

கடந்த ஒகஸ்ட் 1ஆம் திகதி அமுலுக்கு வந்த புதிய விதிகளின்படி, ஒரு வீரர் மூளையளர்ச்சியால் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் மாற்று வீரர் களம் இறங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஸ்மித்திற்குப் பதிலாக மாற்று வீரராக மார்னஸ் லபுஸ்சன் களம் இறக்கப்பட்டார்.

சர்வதேச கிரிக்கெட்டில் முதல் முறை மாற்று வீரர் ஒருவர் சேர்க்கப்பட்ட சந்தர்ப்பமாக இது பதிவு செய்யப்பட்டது.அத்தோடு, மாற்று வீரராக அனுமதிக்கப்படுபவரால், பந்துவீச மற்றும் துடுப்பெடுத்தாட அனுமதி அனுமதியளிக்கப்படும்.இரவு முழுவதும் மருத்துவ குழுவினரால் ஸ்டீவ் நெருக்கமாக அவதானிக்கப்பட்டு வந்தார். அவர் நன்றாக உறங்கி விழித்த நிலையில் தலைவலி மற்றும் தள்ளாட்டத்தை உணர்ந்தார் என்று அவுஸ்திரேலிய கிரிக்கெட் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் மூளை அதிர்வு தொடர்பிலான ஒழுங்கு முறையில் ஸ்டீவ் ஸ்மித் தொடர்ந்து மூளை அதிர்வு தொடர்பில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதோடு அவர் மீதான சோதனை சற்று மோசமான நிலையை காண்பித்தது. அது பாதிப்புக்கான அறிகுறிகளுடன் ஒத்துப்போவதாக உள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் 22ஆம் திகதி லீட்ஸ்- ஹெடிங்லியில் ஆரம்பமாகவிருக்கும் மூன்றாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் ஸ்மித் விளையாடுவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு ஸ்மித் இப்போட்டியில் விளையாடவிட்டால், மார்னஸ் லபுஸ்சன் களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.ஸ்மித்திற்கு பதிலாக களமிறக்கப்பட்ட மார்னஸ் லபுஸ்சன், இரண்டாவது இன்னிங்ஸில் அணியின் அதிகபட்ச ஓட்டமாக 59 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

எனினும், இதுகுறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பினை கிரிக்கெட் அவுஸ்திரேலியா, மிக விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Tue, 08/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை