தெற்காசிய விளையாட்டு போட்டிக்கு ஓட்ட வீரர் சண்முகேஸ்வரன் தகுதி

தெற்காசிய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டத்தில் இலங்கை சார்பாக பங்கேற்கும் வாய்ப்பை ஹட்டன் புதுக்காடு பகுதியைச் சேர்ந்த குமார் சண்முகேஸ்வரன் பெற்றுக் கொண்டார்.

97ஆவது தேசிய மெய்வல்லுனர் போட்டிகள் கொழும்பு சுகததாஸ அரங்கில் நடைபெற்றன. இந்தப் போட்டித் தொடரின் இரண்டாவது நாளான கடந்த சனிக்கிழமை மாலை ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டி நடைபெற்றது.

பலத்த போட்டிக்கு மத்தியில் நடைபெற்ற அந்தப் போட்டியை 31 நிமிடங்கள் 00.46 வினாடிகளில் நிறைவு செய்த சண்முகேஸ்வரன் தங்கப் பதகத்தினை வென்றார். இதன்மூலம் இவ்வருட இறுதியில் நேபாளத்தில் நடைபெறவுள்ள தெற்காசிய விளையாட்டு விழாவில் பங்குபற்றும் வாய்ப்பை அவர் பெற்றுக் கொண்டார்.

இலங்கையின் மெய்வல்லுனர் அரங்கில் நெடுந்தூர ஓட்டப் போட்டிகளில் புதிய நட்சத்திரமாக உருவெடுத்துள்ள சண்முகேஸ்வரன், கடந்த வருடம் மாத்திரம் தேசிய மட்டத்தில் நடைபெற்ற போட்டிகளில் எட்டு தங்கப் பதக்கங்களை வென்று புதிய சாதனை படைத்திருந்தார்.

இதில் தேசிய விளையாட்டு விழா, தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர் மற்றும் வியட்நாம் பகிரங்க மெய்வல்லுனர் போட்டித் தொடர்களில் பெற்றுக்கொண்டு வென்ற தங்கப் பதக்கங்களும் உள்ளடங்கும்.

இதேவேளை கடந்த சனிக்கிழமை காலை நடைபெற்ற ஆண்களுக்கான 100 மீற்றர் இறுதிப் போட்டியில் பங்குகொண்டு, இலங்கை இராணுவத்துக்காக விளையாடி வருகின்ற கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த நட்சத்திர வீரர் மொஹமட் அஷ்ரப், போட்டியை 10.83 வினாடிகளில் நிறைவுசெய்து 6ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

இதேநேரம், அவருடன் போட்டியிட்ட மற்றுமொரு இளம் குறுந்தூர ஓட்ட வீரரான மொஹமட் சபான் 8ஆவது இடத்தைப் பெற்று ஏமாற்றம் அளித்தார். போட்டியை நிறைவுசெய்ய 10.90 வினாடிகளை அவர் எடுத்துக் கொண்டார்.

இம்முறை தேசிய மெய்வல்லுனரில் ஆண்களுக்கான முப்பாய்ச்சலில் தங்கப் பதக்கத்தினை வென்று தெற்காசிய விளையாட்டு விழாவில் பங்குபற்றும் வாய்ப்பைப் பெற்றுக்கொண்ட சப்ரின் அஹமட், ஆண்களுக்கான நீளம் பாய்தல் ஆரம்ப சுற்றுப் போட்டியில் பங்குகொண்டார்.

இலங்கையின் முன்னணி வீரர்கள் கலந்துகொண்ட இப்போட்டியில் 7.30 மீற்றர் தூரத்தைப் பாய்ந்த சப்ரின் அஹமட் எட்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

Mon, 08/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை