புதிய சமுர்த்தி பயனாளிகளுக்கு முதலாம் கட்ட நிதி வழங்கும் நிகழ்வு

ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் ஊடாக ஆறு இலட்சம் சமுர்த்தி பயனாளிகளை இணைத்துக்கொள்ளும் தேசிய வேலைத்திட்டத்திற்கு அமைய மருதமுனை மற்றும் நற்பிட்டிமுனை சமுர்த்தி வங்கிப் பிரிவுகளின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட 857 புதிய சமுர்த்தி பயனாளிகளுக்கான முதலாம் கட்ட நிதியினை வழங்கிவைக்கும் நிகழ்வு நேற்றுமுன்தினம் (24) வங்கி முகாமையாளர் எம்.எம்.எம்.முபீன் தலைமையில் மருதமுனை சமுர்த்தி வங்கி அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட பிரதேச செயலாளர் எம்.எம்.முகம்மட் நஸீர் புதிதாக தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான பத்தொன்பது இலட்சத்து நாற்பத்து ஓராயிரத்து ஐநூற்று ஐம்பது ரூபா நிதியினை சமுர்த்தி குடும்பத் தலைவர்களுக்கு வழங்கிவைத்தார்.

இங்கு கருத்து வெளியிட்ட பிரதேச செயலாளர், நல்லாட்சிக்கான தேசிய அரசாங்கம் பொதுமக்களின் தேவை கருதி பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. கம்பெரலிய வேலைத்திட்டத்தினுடாக இந்த மாவட்டத்தில் பல மில்லியன் ரூபாய் நிதிகள் செலவு செய்யப்பட்டு வருகின்றன. மக்களுக்கு கிடைக்கும் சலுகைகள், வாழ்வாதாரங்களை சரியாக பயன்படுத்தப்பட வேண்டும். சமுர்த்தி உதவி பெறும் நீங்கள் சமுகம் சார்ந்த விடயங்களில் குறிப்பாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற வேலைத்திட்டங்களில் பார்வையாளர்களாக இருக்காமல் பங்காளிகளாக மாற வேண்டும். கடந்த காலங்களில் சமுர்த்தி முத்திரை கேட்டு விண்ணப்பித்து காத்திருந்த மக்கள் இன்றுசந்தேசமடைந்துள்ளனர். அதே போன்று அரச அதிகாரிகளுக்கிருந்த அழுத்தங்களும் குறைவடைந்துள்ளன என்றார்.

 

(பெரியநீலாவணை விசேட நிருபர்)

Mon, 08/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை