வவுனியா வடக்கு பிரதேச செயலாளருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

வவுனியா வடக்கு பிரதேச செயலாளருக்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக பிரதேச மக்களால் இந்த ஆர்ப்பாட்டம் நேற்று முன்னெடுக்கப்பட்டது. அதன் பின்னர் மாவட்ட அரச அதிபர் எம்.ஹனீபாவிடம் கோரிக்கைகள் அடங்கிய மகஜரும் கையளிக்கப்பட்டது.

அரசினால் வழங்கப்பட்ட நிரந்தர வீட்டுத்திட்டம் போரால் பாதிக்கப்பட்ட மக்களை புறம்தள்ளி முறையற்ற விதத்தில் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கும் வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் குற்றம் சாட்டினர்.

முறையற்ற கிரவல் அகழ்வு, வீட்டுத்திட்டம் என்ற பெயரில் காடுகளை அழித்து பயனாளிகளை பயன்படுத்தி விறகு விற்பனையில் ஈடுபடுதல், அவரின் ஊழல் மோசடிகளுக்கு துணை புரியும் அரச ஊழியர்களுக்கு வீடுகள், காணிகள் வழங்குதல், எதிர்க்கும் அரச ஊழியர்களை பழிவாங்குதல் போன்ற செயற்பாடுகளை வடக்கு பிரதேச செயலாளர் முன்னெடுப்பதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் பிரதேச செயலாளர் மீது முறையான விசாரணை நடத்தி, அவரை இடமாற்றம் செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தனர். அத்தோடு, வேறு ஒருவரை தமது பகுதிக்கு நியமிக்குமாறும் அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். குறித்த விடயங்கள் அடங்கிய மகஜர் அரச அதிபர் உட்பட வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா விசேட நிருபர்

Thu, 08/22/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை