வடக்கு,தெற்கு மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்

புதிய அரசியலமைப்பு எனக் கூறி கோடிக்கணக்கில் பணம் வீணடிப்பு

கடந்த நான்கரை வருடகால ஆட்சியில் நான்கு வருடங்களாக பல கோடி ரூபாய் பணத்தை செலவிட்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசியலமைப்பு வல்லுனர்களும் புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்கும் கற்கைகளை மேற்கொள்வதற்கும் வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டனர்.

ஆனாலும், நாட்டுக்கு எந்தவித பயனும் ஏற்படவில்லை.

இதன் மூலம் வட மாகாண மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். அதேவேளை, தெற்கு வாழ் மக்களும் பகைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

நேற்று (30) யாழ்ப்பாணம் முற்றவெளி நகர சபை மைதானத்தில் இடம்பெற்ற “நாட்டுக்காக ஒன்றிணைவோம்” தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் யாழ். மாவட்ட நிறைவு விழா நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த அவர்,

தற்போது ஜனாதிபதி தேர்தல் பற்றி பரவலாக பேசப்பட்டாலும், இந்த குற்றத்தை சரிசெய்து கொள்வதற்கு தற்போதைய அரசாங்கத்திற்கு இன்னும் கால அவகாசம் இருப்பதாகவும் தெரிவித்தார்.

2020ல் ஆட்சியை கைப்பற்றும் அரசாங்கம் நாட்டை முன்னெடுத்துச் செல்ல வேண்டுமென்றால் மேற் குறிப்பிட்ட முக்கிய கடமையை தற்போதைய அரசாங்கம் நிறைவேற்ற வேண்டுமென்று தெரிவித்த ஜனாதிபதி , அந்த பொறுப்பை நிறைவேற்றுவதற்கு ஒன்றுகூடுமாறு ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிக்கு தான் அழைப்பு விடுப்பதாகவும் தெரிவித்தார். பாராளுமன்றம் இந்த பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டியதுடன், தான் அதற்கான பூரண ஒத்துழைப்பை வழங்க தயாராக உள்ளேன்.

19 ஆவது திருத்தச் சட்டத்தினால் அரசியலமைப்பின் ஊடாக நாட்டில் அதிகாரமுடைய மூன்று தலைவர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதியின் அதிகாரத்தில் ஒரு பகுதியை பெற்றுக்கொண்டு ஒரு பகுதியை மீதம் வைத்துள்ளதாகவும் பிரதமரின் அதிகாரத்தை அதிகரித்து சபாநாயகருக்கு மென்மேலும் அதிகாரங்களை வழங்கியுள்ளது. மூன்று தலைவர்களுக்கு ஒரு நாட்டை முன்னெடுத்து செல்ல முடியாதென்றும் அதனால் நாடு சிக்கல்களுக்குள்ளாகுவதாகவும் தெரிவித்தார். ”நாட்டுக்காக ஒன்றிணைவோம்” வேலைத்திட்டம் கடந்த 23ஆம் திகதி யாழ். மாவட்டத்தை மையமாகக்கொண்டு ஆரம்பமானதுடன், மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலக பிரிவுகளும் உள்ளடங்கும் வகையில் பல மக்கள் நலன்புரி நிகழ்ச்சிகள் நடைமுறைப்படுத்தப்பட்டன.

மாவட்டத்தில் வாழும் ஆறு இலட்சத்து பதினையாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கிடையில் நான்கு இலட்சத்தி ஐம்பாதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த நிகழ்ச்சியில் இணைந்துள்ளதுடன் இங்கு முன்னெடுக்கப்பட்ட ஐயாயிரத்து தொல்லாயிரம் வேலைத்திட்டங்களுக்காக 50 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. தொடர்ந்தும் பேசிய ஜனாதிபதி.

சட்டவிரோத போதைப்பொருள் பாவனையை தடுப்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்திருக்கும் வேலைத்திட்டத்தின் மற்றுமொரு விசேட வேலைத்திட்டமொன்றினை எதிர்வரும் மாதத்தில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்போவதாக தெரிவித்தார்.

யுத்த காலங்களில் பாதுகாப்புத்துறையினர் அபகரித்த காணிகளை மீண்டும் மக்களுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் முன்னெடுத்த வேலைத்திட்டங்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, 95 வீதமான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாதவாறு மீதமுள்ள காணிகளையும் அடுத்த மாதமளவில் முழுமையாக விடுவிப்பதற்கு தான் பணிப்புரை விடுப்பதாகவும் தெரிவித்தார்.

யார் எந்த விமர்சனங்களை முன் வைத்தாலும் அரசியல் காரணங்களுக்காக எவர் மீதும் துப்பாக்கிச் சூடுகளை மேற்கொள்ளாத ஒரே யுகம் தனது ஆட்சி காலமாகும். எதிர்காலத்திலும் அந்த சுதந்திரம், ஜனநாயகம், சமாதானம் மற்றும் சமத்துவத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் என்றார்.

எஸ்.நிதர்சன், சுமித்தி தங்கராசா

Sat, 08/31/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை