டெஸ்ட் போட்டிகளில் இருந்து டெல் ஸ்டெயின் திடீர் ஓய்வு

தென்னாபிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் திடீரென டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

தென்னாபிரிக்காவின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின், காயம் காரணமாக உலகக் கிண்ண தொடரிலிருந்து பாதியில் விலகினார். தொடர்ந்து காயத்தால் அவதிப்பட்டுவந்த நிலையில் அவர் டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக வருத்தத்துடன் கூறியுள்ளார்.

ஸ்டெயின் 92 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 439 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். 26 முறை 5 விக்கெட்டுகளையும், 5 முறை 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி உள்ளார். பந்துவீச்சாளர்களுக்கான டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் தொடர்ந்து 263 வாரங்கள், 2008 முதல் 2014 வரை முதலிடத்தில் இருந்துள்ளார்.

ஓய்வு குறித்து ஸ்டெயின் கூறுகையில், “என்னை பொறுத்தவரை டெஸ்ட் போட்டி சிறந்த வடிவமைப்பிலான தொடர். மனதளவிலும், உடலளவிலும் உணர்ச்சி ரீதியாக சவால் அளிக்க கூடியது. நான் அடுத்த எந்த டெஸ்ட் போட்டியிலும் விளையாடப் போவதில்லை. இந்த முடிவு எனக்கு மிகப்பெரிய சங்கடமானது தான்.

எனது கிரிக்கெட் வாழ்க்கையில் பலருக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன். எந்த ஒரு தனி நபரையும் குறிப்பிட்டு சொல்ல முடியாது. இந்த குறுகிய காலத்தில் பலர் எனக்கு உறுதுணையாக இருந்துள்ளனர்” என்றார்.

மேலும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அதிக கவனம் செலுத்த உள்ளதால் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற முடிவெடுத்துள்ளேன்” என்றார். அடுத்த வருடம் டி20 உலகக் கிண்ண தொடர் ஆரம்பமாகவுள்ளதால் அதில் அதிக கவனம் செலுத்த ஸ்டெயின் முடிவெடுத்துள்ளார்.

ஸ்டெயின் ஓய்விற்கு கிரிக்கெட் வீரர்கள் பலர் தங்களது கருத்துகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர். இந்திய அணியின் அணித் தலைவர் விராட் கொஹ்லியும் ட்விட்டரில் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல் தொடரில் விராட் கொஹ்லி தலைமையிலான பெங்களுர் அணியில் ஸ்டெயின் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.

Wed, 08/07/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை