மலையகத்தில் தொடர்ந்தும் மண்சரிவு எச்சரிக்ைக

நாடெங்கும் மழையுடன் கூடிய காலநிலை

காற்றின் வேகமும் அதிகரிப்பு

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவிவரும் மழையுடன் கூடிய காலநிலையால் மலையகப் பகுதிகளில் விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா, இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் மண்சரிவு ஏற்படுவதற்கான ஆபத்து இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் அம்பகமுவ, கொத்மலை, நுவரெலியா பிரதேச செயலகப் பிரிவும் அவற்றை அண்மித்த பகுதிகளும், இரத்தினபுரி மாவட்டத்தில் குருவிட்ட, எஹலியகொட, எலபாத்த மற்றும் கிரியல்ல பிரதேச செயலகப் பிரிவு மற்றும் கேகாலை மாவட்டத்தில் புளத்கோபிட்டிய, தெரனியகல மற்றும் யட்டியாந்தொட்ட பிரதேச செயலகப் பிரிவு ஆகிய இடங்களில் மண்சரிவு ஏற்படலாமென தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளது. இந்தப் பகுதிகளில் ஏற்படக்கூடிய மண்சரிவு தொடர்பில் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தவிரவும் இரத்தினபுரி பிரதேச செயலகப் பிரிவு மற்றும் தெஹியோவிட்ட பிரதேசங்களில் மண்சரிவு ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதால் செம்மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

சேற்றுநீர் தேங்குவது, நிலங்களில் ஏற்படும் திடீர் வெடிப்புக்கள், மின்விளக்கு கம்பங்கள் மற்றும் மரங்கள் தாழிறங்குவது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அந்தப் பகுதியிலிருந்து வெளியேறி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

அதேநேரம், களுகங்கை, களனி கங்கை மற்றும் ஜின் கங்கை ஆகியவற்றில் அதிகரித்திருந்த நீர்மட்டம் குறைந்து சாதாரண மட்டத்தை அடைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். எனினும், களுகங்கையின் நீர்மட்டம் மில்லகந்த பகுதியில் மாத்திரம் ஓரளவுக்கு அதிகமாகவுள்ளது. எனவே களுகங்கையை அண்மித்த பகுதியில் இருப்பவர்கள் அவதானமாக இருக்குமாறும் அவர் வலியுறுத்தினார்.

இதுஇவ்விதமிருக்க, மேல், தென், சப்ரகமுவ, வடமத்திய, மத்திய, வடமேல் மாகாணங்களிலும், களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களிலும் கடும் காற்றுடன் மழைபெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. காற்றின் வேகமானது மணிக்கு 60 கிலோ மீற்றர் முதல் 65 கிலோ மீற்றர்வரை அதிகரித்துக் காணப்படும்.

சில பகுதிகளில் 100 மில்லிமீற்றர் மழை பெய்வதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. குறிப்பாக சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும், காலி மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக் கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் பிற்பகல் 2 மணியின் பின்னர் மழைபெய்யும் என்றும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

பொத்துவிலிலிருந்து ஹம்பாந்தோட்டைவரை, கொழும்பு, புத்தளத்திலிருந்து காங்கேசன்துறையூடாக திருகோணமலை வரையான கடற்பரப்பில் காற்றின் வேகம் அதிகமாகவிருக்கும் என்றும், காற்றின் வேகம் மணிக்கு 60 கிலோ மீற்றர் முதல் 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மீனவர்கள் மற்றும் கடற்படையினர் இது குறித்து அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.

 

மகேஸ்வரன் பிரசாத்

Thu, 08/15/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை