ஒசாமா பின்லேடன் மகன் ‘வான் தாக்குதலில்’ பலி

அல் கொய்தா அமைப்பின் நிறுவனரான ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்ஸா பின்லேடன் வான் தாக்குதல் ஒன்றில் உயிரிழந்திருப்பதாக உளவுப் பிரிவு அதிகாரிகளை மேற்கோள் காட்டி அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும் அவர் எங்கே, எப்போது உயிரிழந்தார் என்பது பற்றிய தகவல் வெளியாகவில்லை.

இது பற்றி அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.

சுமார் 30 வயதான ஹம்ஸா பின்லேடன், அமெரிக்கா மற்றும் ஏனைய நாடுகள் மீது தாக்குதல் தொடுக்கும்படி அழைப்பு விடுத்து ஓடியோ மற்றும் வீடியோ செய்திகளை வெளியிட்டிருந்தார்.

அணிமையில் கடந்த பெப்ரவரி மாதம் அவரது தலைக்கு அமெரிக்க அரசு ஒரு மில்லியன் டொலர் சன்மானம் அறிவித்திருந்தது.

ஹம்ஸா பின்லேடனின் உயிரிழப்புப் பற்றிய செய்தியை என்.பி.சி நியுஸ், நியூயோர்க் டைம்ஸ் மற்றும் சி.என்.என் உட்பட அமெரிக்க ஊடகங்களில் பரவலாக வெளியாகி இருந்தது. அமெரிக்க உளவு அதிகாரிகளை மேற்கோள் காட்டியே இந்த செய்தி வெளியாகி உள்ளது.

அல் கொய்தாவின் வளர்ந்து வரும் தலைவராக ஹம்ஸா பின்லேடன் பார்க்கப்பட்டார். அமெரிக்க அரசு தொடர்புபட்ட கடந்த இரண்டு ஆண்டுகளில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கை ஒன்றில் அவர் கொல்லப்பட்டிருக்கிறார் என்று வெளியான செய்தியில் கூறப்பட்டுள்ளது. எனினும் இரகசியமான முறையில் தகவல் திரட்டப்பட்ட இது குறித்த அறிக்கைகளில், ஹம்ஸா பின்லேடன் இறந்த இடம் அல்லது திகதி குறித்த விபரங்கள் தெளிவாக இல்லை.

இந்த செய்தி பற்றி புதனன்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிடம் செய்தியாளர்கள் கேட்டபோது அதற்கு பதிலளிக்க அவர் மறுத்துவிட்டார்.

செப்டெம்பர் 11 இரட்டை கோபுரத் தாக்குதல் நடந்தபோது ஹம்ஸா சிறுவனாக இருந்தார். அந்தத் தாக்குதலுக்கான திட்டம் தீட்டப்பட்டபோது ஒசாமாவின் அருகில் அவர் இருந்ததாக அல் கெய்தா கூறுகிறது.

Fri, 08/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை