த ஹன்ரட் கிரிக்கெட் தொடரில் பயிற்சியாளராகிறார் மஹேல

இங்கிலாந்தில் எதிர்வரும் ஆண்டு நடைபெறவுள்ள 100 பந்துகள் கொண்ட கிரிக்கெட் தொடரில், அணியொன்றினை பயிற்றுவிக்கும் பொறுப்பு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தனவுக்கு கொடுக்கப்படவுள்ளது.

இத்தொடரில் பங்கேற்கவுள்ள சவுத்தம்டன் நகரினை பிரதிநிதித்துவம் செய்து விளையாடவுள்ள ஆண்கள் அணிக்கு, மஹேல ஜயவர்தன பயிற்சியாராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த அணிக்கு துணை பயிற்சியாராக நியூஸிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷேன் பொண்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.

சவுத்தம்டன் நகரினை பிரதிநிதித்துவம் செய்து விளையாடும் பெண்கள் அணியின் பயிற்சியாளராக, இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவி சரோலட் எட்வார்ட்ஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து மஹேல கூறுகையில், ‘இந்த கிரிக்கெட் தொடரை மிகவும் ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருக்கின்றேன். குறிப்பாக பயிற்சியாளராக மாறியது கௌரவமான விடயம்’ என கூறினார்.

சர்வதேச கிரிக்கெட்டுக்கு பிரியாவிடை கொடுத்த பின்னர் 2015ஆம் ஆண்டு இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு துடுப்பாட்ட நிபுணராக சில காலம் கடயைமாற்றிய மஹேல ஜயவர்தன, அதன் பிறகு கிரிக்கெட் பயிற்சியாளராக தனது வாழ்க்கையினை தொடர ஆரம்பித்தார்.

பின்னர் 2017ஆம் ஆண்டு, இந்தியன் ப்ரீமியர் லீக் ரி-20 கிரிக்கெட் தொடரில் விளையாடும் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்ற மஹேல ஜயவர்தன, அந்த அணிக்காக இரண்டு முறை சம்பியன் பட்டத்தை பெற்றுக்கொடுக்க உதவியாக இருந்துள்ளார்.

இதனையடுத்து தனது மவுசு அதிகரிக்க, மஹேல ஜயவர்தனவை பல வெளிநாட்டு அணிகள் தங்களது அணிக்கு பயிற்சியாராக நியமித்தது.

பங்களாதேஷ் ப்ரீமியர் லீக் தொடரில் விளையாடும் குல்னா டைடன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராகவும் மஹேல ஜயவர்தன இரண்டு வருட ஒப்பந்தத்தின் அடிப்படையில் கடந்த ஆண்டு நியமனம் பெற்றார்.

இங்கிலாந்து கிரிக்கெட் சபையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 100 பந்துகள் கொண்ட இந்த கிரிக்கெட் தொடருக்கு த ஹன்ரட் (The Hundred) எனப் பெயரிடப்பட்டுள்ளது.

ஆண்கள் மற்றும் பெண்கள் என பங்கேற்கும் இத்தொடர், எதிர்வரும் 2020ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடரில், இங்கிலாந்தின் பிராந்தியங்களைச் சேர்ந்த எட்டு அணிகள் பங்கேற்று விளையாடவுள்ளன.

இந்த ஹன்ரட் கிரிக்கெட் தொடரில் 6 பந்துகள் கொண்ட 15 ஓவர்களும் 10 பந்துகள் கொண்ட ஒரு ஓவரும் வீசப்படும் என முன்னர் கூறப்பட்ட போதும் இந்த ஆண்டு அதில் சில மாற்றங்கள் இடம்பெற்றிருப்பதாக இங்கிலாந்து கிரிக்கெட் சபை தெரிவித்திருந்தது.

அந்தவகையில் இந்த கிரிக்கெட் தொடரில் 10 பந்துகள் கொண்ட 10 ஓவர்கள் வீசப்படவுள்ளதோடு, குறிப்பிட்ட ஒவ்வொரு ஓவரினதும் 10 பந்துகளையோ அல்லது 5 பந்துகளையோ பந்துவீச்சாளர் ஒருவருக்கு வீச முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கிரிக்கெட் தொடரில் இன்னும் சில புதிய விதிமுறைகளும் அறிமுகப்படுத்தவுள்ளது. இத்தொடர் நெருங்கும் போது இதற்கான அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகின்றது.

Sat, 08/31/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை