வேட்பாளரை அறிவித்த பின்னரே முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானம்

நாங்கள் ஒப்பந்தம் செய்ய வேண்டிய சூழ்நிலை இருக்கிறது வெறுமனே தேர்தலில் கண்மூடித்தனமாக வாக்களிக்க முடியாது.

வேட்பாளர் யாரென்று அறித்த பின்பே எமது கட்சி முடிவெடுக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் தெரிவித்தார்.

கிண்ணியா பிரதேசத்தில் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டு வந்த ஆலங்கேணி - நெடுந்தீவு வீதிக்கான காபர்ட் இடும் வேலைத் திட்டத்தை நேற்று முன்தினம் (18) ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இந் நிகழ்வில் முன்னாள் நகர சபை தவிசாளர் ஹில்மி மஹ்ரூப், கிண்ணியா பிரதேச சபைத் தவிசாளர் எம்.எச்.எம். சனூஸ், கிண்ணியா நகர சபையின் முன்னாள் பிரதித் தவிசாளர் அமீன் முஜீப், பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் கே.எம். நிகார், நகர சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் அவர் தொடர்ந்தும் பேசுகையில் கூறியதாவது:-

கிண்ணியா ஆலங்கேணி - நெடுந்தீவு புதுக்குடியிருப்பு வீதி வருடா வருடம் வெள்ளத்தினால் பாரிய அளவு பாதிக்கப்பட்டு வருகிறது இதனால் மக்கள் போக்குவரத்து செய்வதில் மிகுந்த அசௌகரியத்தை எதிர்நோக்கினர். இதனை மக்கள் எனது கவனத்துக்கு கொண்டு வந்ததையடுத்து இதற்கான நிதி பெற்றுக் கொடுக்கப்பட்டது.

எதிர்வருகின்ற தேர்தல் எமக்கு முக்கியமான தேர்தலாகும். 1948ஆம் ஆண்டிலிருந்து ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் நாங்கள் வாக்களித்து வந்திருக்கின்றோம். நாங்கள் பெரும்பான்மை கட்சியில் இருந்தவர்கள் தான், தற்போது சிறுபான்மை கட்சிகளுக்கு வாக்களித்து வருகிறோம். முஸ்லிம்களின் எதிர்கால பாதுகாப்பிற்கு, கலாசார பாதுகாப்பிற்கு, முஸ்லிம்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு யார் உத்தரவாதம் தருகிறார்களோ அவர்களுக்கே வாக்களிப்பது என தீர்மானித்து இருக்கின்றோம்.

உங்களுக்கு தெரியுமா தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு பதினாறு பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்துக்கொண்டு பிரதமரை தமக்கு ஏற்றால் போல் ஆட்டிப் படைக்கின்றது. சாதாரண ஒரு கொங்கிரீட் வீதியை கூட திறப்பதற்கு பிரதமர் வருகிறார். இது அவர்களின் பலம். அதுபோல் முஸ்லிம் காங்கிரஸில் குறிப்பிட்ட சில பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரம் இவ்வாறான விடயங்களை செய்ய முடியாது. அனைவரும் ஒன்றிணைந்து கூடுதலான பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெறுகின்ற வகையில் செயற் பட்டால் நாமும் பிரதமரிடமும் ஜனாதிபதியிடமும் எமது உரிமைகளை வென்றெடுக்கலாம் என்றார்.

திருமலை மாவட்ட விசேட நிருபர்

Tue, 08/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை