அமேசான் தீயை அணைப்பதற்கு உதவ ஜி 7 நாடுகள் இணக்கம்

தொழில்நுட்ப, நிதி உதவிகளுக்கு திட்டம்

அமேசான் மழைக்காட்டில் ஏற்பட்டிருக்கும் தீயை கட்டுப்படுத்துவதற்கு உதவ ஜி7 மாநாட்டில் இணக்கம் எட்டப்பட்டுள்ளது.
“தொழில்நுட்ப மற்றும் நிதி உதவிகளை” வழங்குவது குறித்து உடன்பாடு ஒன்றை நெருங்கி இருப்பதாக பிரான்ஸ் ஜனாதிபதி எம்மானுவேல் மக்ரோன் கடந்த ஞாயிற்றுக்கிழமை குறிப்பிட்டார்.
பிரான்ஸில் உள்ள பியாரிட்ஸ் நகரில் 45ஆவது ஜி7 மாநாடு 3 நாட்கள் நடைபெற்றது. வளர்ச்சி அடைந்த நாடுகளின் கூட்டமைப்பான ஜி7 அமைப்பில் இடம்பெற்றுள்ள அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, கனடா, இத்தாலி ஆகிய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்றனர்.
பிரேசிலில் ஏற்பட்டிருக்கும் இந்தக் காட்டுத் தீ சம்பவங்கள் சர்வதேச அளவில் அவதானத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அமேசான் காடழிப்புக்கு பிரேசில் ஜனாதிபதி செயீர் பொல்சொனாரோ ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாக அவர் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.
எனினும் சர்வதேச அழுத்தம் அதிகரித்த நிலையில் அவரது அரசு இந்த தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தீவிர நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்துள்ளது.
இந்த தீ ஒரு சர்வதேச பிரச்சினை என்று பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தார்். இந்நிலையில் அவரது தலைமையில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் இந்த பிரச்சினைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
இதன்படி முடியுமான விரைவில் தீயை அணைப்பதற்கு உதவ ஜி7 நாடுகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை இணங்கின. இதற்காக 12.3 மில்லியன் டொலர் நிதியை அளிப்பதற்கு பிரிட்டன் பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் நேற்று உறுதி அளித்தார்.
“எமது குழுவினர் அனைத்து அமேசான் நாடுகளுடனும் தொடர்பை ஏற்படுத்துவதன் மூலம் தேவையான தொழில்நுட்ப வளங்கள் மற்றும் நிதி பற்றி மிக உறுதியான கடப்பாடு ஒன்றை ஏற்படுத்த எம்மால் முடியுமாக இருக்கும்” என்று ஜி7 நாடுகள் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய மழைக்காடான அமேசானின் 60 வீதமானது பிரேசிலில் இருப்பதோடு பொலிவியா, கொலம்பியா, ஈக்வடோர், பிரெஞ்ச் குவைனா, கயானா, பெரு, சுரினாம் மற்றும் வெனிசுவேலா ஆகிய நாடுகளிலும் அது பரந்துள்ளது.
சர்வதேச அழுத்தம் அதிகரித்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை தீயை கட்டுப்படுத்த பிரேசில் ஜனாதிபதி இராணுவத்திற்கு உத்தரவிட்டார். இதற்காக 44,000 துருப்புகள் ஈடுபடுத்தப்படுவதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்தது. இந்நிலையில் கடந்த ஞாயிறன்று தீ பரவியிருக்கும் ஏழு மாநிலங்களில் இராணுவம் தலையிட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர் விமானங்களும் நீரை கொட்டி வருகிறது. இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகுவின் உதவியை ஏற்பதாக ஜனாதிபதி கடந்த ஞாயிறன்று அறிவித்திருந்தார்.
முன்னதாக அவர் இது தொடர்பில் சர்வதேச தலையீட்டை விமர்சித்ததோடு இது பிரேசிலின் இறைமையில் தலையிடுவது என்று சாடினார்.
எனினும் பிரேசில் தீயை கட்டுப்படுத்த தவறினால் தென் அமெரிக்க நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையிலான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்படும் வர்த்தக உடன்படிக்கையில் இருந்து வாபஸ் பெறுவது பற்றி ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்திருந்தது. பிரேசிலின் இறைச்சி ஏற்றுமதிக்கு தடை விதிக்க பின்லாந்து நிதி அமைச்சர் ஐரோப்பிய ஒன்றியத்தை கோரி இருந்தார்.
பிரேசிலில் வரண்ட பருவத்தில் காட்டுத் தீ பரவுவது வழக்கமானது என்றபோதும், அது இந்த ஆண்டு 85 வீதம் அதிகரித்திருப்பதாக பிரேசிலின் விண்வெளி ஆய்வுக்கான தேசிய நிறுவனம் வெளியிட்ட தரவுகளில் குறிப்பிடப்பட்டிருந்தது.
2019 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 75,000க்கும் மேற்பட்ட காட்டுத் தீ சம்பவங்கள் பாதிவாகி இருப்பதோடு அதில் அதிகப் பெரும்பான்மையானவை அமேசான் பிராந்தியத்தில் இடம்பெற்றுள்ளது.
இதற்கு சுற்றுச்சூழல் தொடர்பில் ஜனாதிபதி பொல்சொனாரோவின் செயற்பாடுகள் குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். பூமியின் நுரையீரல் என்று அழைக்கப்படும் அமேசான் காடுகள் ஒட்சிசன் வெளியிடுவதுமட்டுமல்லாமல் மனிதன் வெளியிடும் கரிமவாயுக்களை உட்கொள்வதிலும் மிகப்பெரிய பங்கு வகிக்கின்றன.
இந்த தீ சம்பவங்கள் குறித்து அரசுகள் தலையிடக் கூறி உலகெங்கும் பல ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. மழைக்காடுகளை பாதுகாக்கும்படி பாப்பரசர் பிரான்சிஸும் கடந்த ஞாயிற்றுக்கிழமை அழைப்பு விடுத்திருந்தார்.
 

Tue, 08/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை