ஆப்கானில் திருமண விருந்தில் குண்டு வெடிப்பு: 63 பேர் பலி

ஆப்கான் தலைநகர் காபுலில் திருமண மண்டபம் ஒன்றுக்குள் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 63 பேர் கொல்லப்பட்டு மேலும் 183 பேர் காயமடைந்துள்ளனர்.

திருமண விழாவின்போது தற்கொலைதாரி ஒருவர் குண்டை வெடிக்கச் செய்ததாக பார்த்த ஒருவர் குறிப்பிட்டுள்ளார். தலைநகரில் ஷியா முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கும் மேற்குப் பகுதியில் கடந்த சனிக்கிழமை இரவு இந்த குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது.

தாம் இந்த தாக்குதலின் பின்னணில் இல்லை என்று தலிபான்கள் மறுத்துள்ளனர். இந்த தாக்குதல் குறித்து வேறு எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை.

சுன்னி முஸ்லிம் குழுக்களான தலிபான்கள் மற்றும் இஸ்லாமி அரசுக் குழு ஆப்கான் மற்றும் பாகிஸ்தானில் சிறுபான்மை ஷியா ஹசரா மக்களை இலக்கு வைத்து தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சமூக ஊடகங்களில் பரவும் படங்களில் திருமண அரங்கம் முழுவதும் சிதறிய உடல்கள் கிடப்பதைக் காண முடிகிறது.

இறந்தவர்களின் எண்ணிக்கையை குண்டுவெடிப்பு நடந்து சில மணி நேரங்களுக்குப் பின்னர் ஆப்கானிஸ்தான் உள்நாட்டு விவகாரங்களுக்கான அமைச்சகம் வெளியிட்டது.

ஆப்கானில் வழக்கமாக திருமண நிகழ்வுகளில் நூற்றுக்கணக்கானவர்கள் ஒன்று திரள்வதோடு அவர்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் என வெவ்வேறாக பிரிந்தே அந்த நிகழ்வில் பங்கேற்கின்றனர்.

இந்த நிகழ்வில் பங்கேற்ற விருந்தினர் ஒருவர் கூறும்போது, தாம் பெண்கள் பகுதியில் இருந்ததாகவும் ஆண்கள் பக்கத்தில் இருந்து பாரி வெடிப்பு ஒன்று நிகழ்ந்ததாகவும் கூறினார்.

“அனைவரும் அழுதபடியும் கூச்சலிட்டபடியும் வெளியே ஓடினார்கள். சுமார் 20 நிமிடங்களாக அந்த மண்டபம் புகைமூட்டமாக இருந்தது. ஆண்கள் பக்கம் இருந்த அனைவரும்போல் ஒன்று இறந்து அல்லது கயப்பட்டிருந்தார்கள். வெடிப்பு இடம்பெற்று தற்போது இரண்டு மணி நேரம் ஆனபோதும் அவர்கள் தொடர்ந்து உடல்களை அப்புறப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்” என்று அவர் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு கூறினார்.

மிர்வை என்று பெயர் குறிப்பிட்ட மணமகன் உள்ளுர் தொலைக்காட்சிக்கு கூறியதாவது: “குடும்பத்தினர், எனது மணமகள் அதிர்ச்சியில் பேச முடியாது இருக்கின்றனர். எனது மணமகள் தொடர்ந்து மயக்க நிலையில் இருக்கிறார். எனது சகோதரர், எனது நண்பர்கள், எனது உறவினர்களை நான் இழந்துவிட்டேன். எனது வாழ்வில் மீண்டும் மகிழ்ச்சி திரும்பாது” என்றார்.

இந்தத் தாக்குதலை கடுமையாக கண்டிப்பதாக தலிபான் பேச்சாளர் ஒருவர் அறிவித்துள்ளார். “பெண்கள் மற்றும் சிறுவர்களை இலக்குவைத்த திட்டமிட்ட இந்த கொடிய தாக்குதலை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது” என்று சபியுல்லா முஜாஹித் என்ற அந்த பேச்சாளர் ஊடகங்களுக்கு குறுஞ் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.

எனினும் 10 நாட்களுக்கு முன் காபுலில் பொலிஸ் நிலையம் ஒன்றின் முன்பு நடந்த குண்டுவெடிப்புக்கு தலிபான் பொறுப்பேற்றது. அதில் 14 பேர் இறந்தனர்் 150 பேர் காயமடைந்தனர்.

பாகிஸ்தானில் உள்ள குவெட்டா நகரில் தலிபான் முன்னணி தலைவர் ஹிபதுல்லா அகுன்ட்சாதாவின் சகோதரர், கடந்த வெள்ளியன்று கொல்லப்பட்டார்.

ஹிபதுல்லா அங்கு ஒரு பள்ளிவாசலில் தொழுகை செய்ய இருந்ததாகவும் அவரை இலக்கு வைத்து அப்போது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் ஆப்கானிஸ்தான் உளவு வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆயிரக்கணக்கான படைகளை ஆப்கானிஸ்தானில் நிலைநிறுத்தியுள்ள அமெரிக்கா உடன் அமைதி உடன்படிக்கை செய்துகொள்ள நெருக்கம் காட்டி வந்தாலும், அங்கு பதற்றம் தொடர்ந்து வருகிறது.

Mon, 08/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை